பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கேரள காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் இடைநீக்கம்!
கேரள மாநில பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் மீது பல பெண்கள் பாலியல் புகார் எழுப்பிய நிலையில், அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
முதலில், மலையாள நடிகை மற்றும் முன்னாள் பத்திரிகையாளரான ரினி ஆன் ஜார்ஜ் சமூக வலைதளத்தில், ஒரு முக்கிய அரசியல் கட்சியின் “இளம் தலைவர்” தொடர்ந்து தன்னிடம் ஆபாசமான செய்திகள் அனுப்பியதாகவும், ஹோட்டலுக்கு வர அழைத்ததாகவும் குற்றம்சாட்டினார். அவர் பெயரை வெளிப்படையாக குறிப்பிடாத போதிலும், பாலக்காட்டில் உள்ள ராகுல் மம்கூத்ததில் அலுவலகத்திற்கு முன் பாஜக, சிபிஎம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, எழுத்தாளர் ஹனி பாஸ்கரன் மற்றும் திருநங்கை அவந்திகா ஆகியோரும், ராகுல் மம்கூத்ததில் தங்களுக்கு மோசமான செய்திகளை அனுப்பியதாகவும், பாலியல் தொடர்புக்கு அழைத்ததாகவும் குற்றம் சாட்டினர்.
இந்த சர்ச்சை பெரிதும் பரவிய நிலையில், ராகுல் மம்கூத்ததில் தனது இளைஞர் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது, காங்கிரஸ் கட்சியும் அவரை அதிகாரப்பூர்வமாக இடைநீக்கம் செய்துள்ளது.