டெல்லி: ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

டெல்லி முன்னாள் அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியுள்ளனர். ஆம் ஆத்மி ஆட்சிக்காலத்தில் மருத்துவமனை கட்டுமான ஒப்பந்தங்களில் சட்டவிரோத நிதி பரிமாற்றம் நடந்ததாகக் கூறி இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்.

எனினும், இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

சவுரவ் பரத்வாஜ், கிரேட்டர் கைலாஷ் தொகுதியிலிருந்து மூன்று முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். டெல்லி சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு மற்றும் நீர்வளத் துறை அமைச்சராகவும், டெல்லி நீர்வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ பேச்சாளராகவும் உள்ளார்.

கடந்த 2024 ஆகஸ்டில், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்திர குப்தா, 2018–19 காலத்தில் ரூ.5,590 கோடி மதிப்பீட்டில் 24 மருத்துவமனைகளை கட்ட, மேம்படுத்த வழங்கப்பட்ட ஒப்புதலில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு ஆணையம், பரத்வாஜ் மற்றும் முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையில், மருத்துவமனை கட்டுமான ஒப்பந்தங்களில் சில இடங்களில் மதிப்பீட்டைக் கடந்த செலவுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் எந்தத் திட்டமும் காலக்கெடுவுக்குள் நிறைவு செய்யப்படவில்லை என அமலாக்கத் துறை கூறுகிறது. எடுத்துக்காட்டாக, ரூ.1,125 கோடி மதிப்பீட்டில் 6,000 படுக்கைகள் கொண்ட ஐசியு மருத்துவமனை உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தும், அதில் பாதி பணியும் நிறைவு பெறவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் எதிர்வினை:

இந்தச் சோதனை முழுக்க அரசியல் பழிவாங்கலின் விளைவாக நடத்தப்பட்டதாக டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி குற்றஞ்சாட்டினார். “பிரதமர் நரேந்திர மோடியின் பட்டச் சான்றிதழ் குறித்து கேள்விகள் எழுப்பியதால், மக்கள் கவனத்தை மாற்ற இந்த ரெய்டு நடத்தப்படுகிறது” என்றார்.

முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியதாவது:

“நேற்று நாடு முழுவதும் பிரதமரின் பட்டப்படிப்பு குறித்து கேள்விகள் எழுந்தன. அதிலிருந்து கவனத்தை திசை திருப்ப, அடுத்த நாளே எங்கள் கட்சி முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. எங்கள் கேள்வி ஒன்றே ஒன்று – மோடியின் பட்டச் சான்றிதழ் உண்மையா, போலியா? அதற்கு பதில் சொல்லாமல் ரெய்டு நடத்துவது ஏன்?” என்று வினவினார்.

தற்போது டெல்லியில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது; ரேகா குப்தா முதல்வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box