“50 ஆண்டுகள் பாஜக ஆட்சி என்று அமித் ஷா கூறுவதற்கான காரணம்…” – ராகுல் காந்தி விளக்கம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை எதிர்த்து, பிஹாரில் 1,300 கிலோமீட்டர் நீளத்தில் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யை ராகுல் காந்தி முன்னெடுத்து வருகிறார்.
ஆகஸ்ட் 17 ஆம் தேதி சசாரமில் தொடங்கிய இந்த 16 நாள் பயணம், செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் பேரணியுடன் நிறைவடைகிறது. இந்த யாத்திரையில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஎம்எல் தலைவர்கள் உட்பட கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். இன்று சுபாலில் நடைபெற்ற நிகழ்வில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் இணைந்தார்.
அங்கு உரையாற்றிய ராகுல் காந்தி, “பாஜக ஆட்சி 40 முதல் 50 ஆண்டுகள் நீடிக்கும் என்று அமித் ஷா பலமுறை தெரிவித்துள்ளார். அவர்கள் எப்படிச் சரியாக 40-50 ஆண்டுகள் ஆட்சி செய்யப்போகிறார்கள் என்பதை முன்னதாகவே தெரிந்துகொள்கிறார்கள்? இது மிகவும் ஆச்சர்யமான கூற்று.
இன்று, பாஜக வாக்கு திருடலில் ஈடுபடுகிறது என்பது மக்களின் முன் வெளிப்படையாகியுள்ளது. இது முதலில் குஜராத்தில் தொடங்கியது, பின்னர் 2014ல் தேசிய மட்டத்தில் வளர்ந்து, பிற மாநிலங்களிலும் பரவியது. நான் உண்மையைச் சொல்லாமல் பேசமாட்டேன்; என்னிடம் தரவுகள் இருக்கும்போது மட்டுமே பேசுவேன்.
இந்தப் போராட்டம், பாஜக தலைமையும் தேர்தல் ஆணையமும் வாக்கு திருட முயலும் முன் இருமுறை சிந்திக்கத் தூண்டும்” எனக் கூறினார்.