இந்திய வான்வெளிக்கு ‘சுதர்சன சக்கரம்’ பாதுகாப்பு கவசம்: முப்படை தளபதி தகவல்
இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ அமைப்பைப் போன்று, இந்தியாவும் விரைவில் ‘சுதர்சன சக்கரம்’ எனப்படும் வான் பாதுகாப்பு கவசத்தை உருவாக்கவுள்ளது என முப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர், இந்தியாவுக்கு எதிராக குஜராத் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைத் தாக்குவோம் என மிரட்டல் விடுத்தார். இதையடுத்து, சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி, எதிரி நாடுகளின் அச்சுறுத்தலிலிருந்து முக்கிய இடங்களையும் ராணுவத் தளங்களையும் பாதுகாக்க, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வான் பாதுகாப்பு கவசம் உருவாக்கப்படும் என அறிவித்தார். அதற்கே ‘சுதர்சன சக்கரம்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து இந்தூரில் நடைபெற்ற ராணுவ கருத்தரங்கில் ஜெனரல் அனில் சவுகான் கூறியதாவது:
“சுதர்சன சக்கரம் வான் பாதுகாப்பு அமைப்பில் மூன்று படைகளின் ஏவுகணைகள், சென்சார்கள், கண்காணிப்பு கருவிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் எந்த சூழ்நிலையிலும் நாட்டை ஏவுகணைத் தாக்குதலிலிருந்து பாதுகாக்க முடியும்.
இதற்காக தரை, வான், விண்வெளி, கடல் மற்றும் நீர்மூழ்கிக் கருவிகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட கணினி தொழில்நுட்பம், தரவு பகுப்பாய்வு, குவாண்டம் தொழில்நுட்பம் போன்றவை பயன்படுத்தப்பட வேண்டும். இந்த திட்டம் 2035ஆம் ஆண்டுக்குள் முழுமையாக செயல்படுத்தப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.