பாகிஸ்தானில் பிச்சைக்காரர் வேடமிட்டு உளவு பார்த்த அஜித் தோவல் – தெரியாத சுவாரசியங்கள்

சமீபத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் குறித்த நூல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் பற்றிய பல வினோதமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

1945 ஆம் ஆண்டு உத்தராகண்டின் பவுரி கர்வால் அருகே உள்ள கிரி என்ற மலைக் கிராமத்தில் அஜித் தோவல் பிறந்தார். உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் ஹேம்வதி நந்தன் பகுகுணாவின் உறவினராகிய அவர், 1968ல் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.

கேரள காவல்துறையில் பணியாற்றிய காலத்தில், 1971 தலச்சேரி கலவரத்தை அடக்கியதால் நாடு முழுவதும் புகழ் பெற்றார். பின்னர் 1972ல் இந்திய உளவுத் துறையில் இணைந்தார்.

மிசோராமில் செயல்பட்ட கிளர்ச்சிக் குழுக்களை அடக்க அவரை அனுப்பினர். அவரது முயற்சியால் 1986ல் மத்திய அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதற்குப் பிறகு பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டம் குறித்த ரகசிய தகவல்களை திரட்ட அவர் அங்கு அனுப்பப்பட்டார். இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரிந்தபோது, அந்நாட்டின் இளம் அரசியல்வாதி நவாஸ் ஷெரீபுடன் நெருங்கிய உறவினராகி விட்டார்.

பாகிஸ்தான் அணு ஆராய்ச்சி மையம் செயல்பட்ட கஹுதா பகுதியில், அவர் பிச்சைக்காரர் வேடமிட்டு உளவு பார்த்தார். அந்த மையத்தின் விஞ்ஞானிகள் முடி திருத்தம் செய்த சலூனில் இருந்து சேகரிக்கப்பட்ட முடிகளை இந்தியாவுக்கு அனுப்பினார். அவற்றை ஆய்வு செய்தபோது யுரேனியம் உள்ளிட்ட கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டம் உலகிற்கு வெளிப்பட, சர்வதேச அழுத்தத்தால் அந்த திட்டம் 15 ஆண்டுகள் தாமதமானது.

1988ல் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் காலிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்தபோது, அஜித் தோவல் ஐஎஸ்ஐ உளவாளி போலவே நடித்து அவர்களுடன் கலந்து, அனைத்து தகவல்களையும் என்எஸ்ஜி படைக்கு கொடுத்தார். அதன் அடிப்படையில் தீவிரவாதிகள் ஒருவருக்கொருவர் அழிக்கப்பட்டு, இறுதியில் சரண் அடைய நேரிட்டது. இதற்காக அவருக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.

1990களில் காஷ்மீர் தீவிரவாதத்தை குறைக்க அனுப்பப்பட்ட அவர், அங்குள்ள முக்கிய தீவிரவாதி குகா பாரேவை சமாதானப்படுத்தி தேர்தலில் நிற்க வைத்தார். இதனால் காஷ்மீரில் வன்முறை குறைந்தது.

1999 காந்தஹார் விமான கடத்தலில் நடந்த பேச்சுவார்த்தையிலும் அவர் பங்கேற்றார். அதே ஆண்டு கார்கில் போரின்போது உளவுத்துறைத் தலைவராக பதவி ஏற்றார். 2005ல் ஓய்வு பெற்றார். அந்நேரம் தாவூத் இப்ராகிமை அழிக்கும் ரகசிய முயற்சிக்கும் அவர் வழிகாட்டியாக இருந்தார். ஆனால் தாவூத் திருமணத்தில் பங்கேற்காமல் தப்பித்ததால், வலது கரம் விக்கி மல்ஹோத்ரா மட்டும் கைது செய்யப்பட்டார்.

2014ல் நரேந்திர மோடி பிரதமரான பிறகு, அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டு தொடர்ந்து பதவியில் உள்ளார்.

Facebook Comments Box