காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் பலி – இந்தியா கண்டனம்
காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரில் நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி மற்றும் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை நடைபெற்ற இந்த தாக்குதலில், மருத்துவமனை மீது இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பத்திரிகையாளர்களான ஹுசாம் அல்-மஸ்ரி, மரியம் அபு டாகா, மோஸ் அபு தாஹா, முகமது சலாமா, அகமது அபு அஜீஸ் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள் ராய்ட்டர்ஸ், அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களுக்காக பணியாற்றி வந்தவர்கள்.
இந்த சம்பவம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்,
“காசாவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியும், வருத்தத்திற்குரியதுமாகும். பொதுமக்கள் உயிரிழப்புகளை இந்தியா எப்போதும் கண்டித்துக் கொண்டே உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் ஏற்கனவே விசாரணையை தொடங்கியுள்ளது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை உலக நாடுகள் கண்டித்து வருகின்றன. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான மோதலில், ஊடகவியலாளர்கள் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 22 மாதங்களில் காசா பகுதியில் மட்டும் 192 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக ‘பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு’ தெரிவித்துள்ளது. அதே சமயம், உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் இதுவரை 18 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.