ஜெர்மனி செய்தித்தாள் தகவல்: பிரதமர் மோடியுடன் பேச மறுத்த ட்ரம்ப் 4 முறை அழைப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சமீபத்திய வாரங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள நான்கு முறை முயன்றதாகவும், ஆனால் பிரதமர் மோடி அந்த அழைப்புகளை ஏற்க மறுத்துவிட்டதாகவும், ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட்டர் ஆல்ஜெமைன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்திருக்கும் சூழலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாகக் காட்டி, இந்தியா மீது 50 சதவீதம் வரி அமெரிக்கா விதித்துள்ளது. இதுவரை பிரேசிலைத் தவிர வேறு எந்த நாட்டுக்கும் இத்தகைய அதிக வரி அமெரிக்கா விதித்ததில்லை. இதனால், இந்தியா – அமெரிக்கா உறவுகள் கடினநிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், “ட்ரம்ப் நான்கு முறை மோடியை அழைக்க முயன்றார், ஆனால் மோடி அந்த அழைப்புகளை ஏற்க மறுத்தார்” என பிராங்க்ஃபர்ட்டர் ஆல்ஜெமைன் குறிப்பிட்டுள்ளது. பெர்லினை தளமாகக் கொண்ட குளோபல் பப்ளிக் பாலிசி இன்ஸ்டிடியூட் இணை நிறுவனர் தோர்ஸ்டன் பென்னர், அந்த செய்தி அறிக்கையின் நகலை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், “பிரதமர் மோடி பேச மறுப்பது, அவரது கோபத்தின் ஆழத்தையும் அதேசமயம் எச்சரிக்கையையும் காட்டுகிறது” எனவும் அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்தியா மீது கூடுதல் வரி விதித்த ட்ரம்ப், ஜூலை 31 அன்று, “இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை; இருவரும் சேர்ந்து தங்கள் சீரழிந்த பொருளாதாரங்களை வீழ்த்துகிறார்கள்” என்று குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ஆகஸ்ட் 10 அன்று, இந்தியா உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக மாறும் பாதையில் உள்ளது என்று தெரிவித்தார்.

கடைசி உரையாடல்: பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் கடைசியாக ஜூன் 17 அன்று தொலைபேசி மூலம் பேசியிருந்தார். கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தும், ட்ரம்ப் முன்னதாகவே அமெரிக்கா திரும்பிச் சென்றதால் அது நடைபெறவில்லை. பின்னர், ஜூலை 17 அன்று ட்ரம்பின் வேண்டுகோளின் பேரில் இருவரும் மீண்டும் தொலைபேசி மூலம் பேசினர். அந்த உரையாடல் சுமார் 35 நிமிடங்கள் நீடித்தது.

அந்த உரையாடலின் போது, பஹல்காம் தாக்குதலுக்காக ட்ரம்ப் தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, பயங்கரவாதத்திற்கு எதிரான தனது ஆதரவை வெளிப்படுத்தியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. மேலும், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பிரச்சனையில் எந்த நாடும் மத்தியஸ்தம் செய்ய முடியாது என்பதை பிரதமர் மோடி ட்ரம்பிடம் உறுதிபடுத்தியதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

Facebook Comments Box