கருப்பு பணத்தை வெள்ளையாக்க அரசியல் கட்சி: ரூ.271 கோடி பரிவர்த்தனை செய்த ராஜஸ்தான் தொழிலதிபர்

ராஜஸ்தானில் கருப்பு பணத்தை வெள்ளையாக்க அரசியல் கட்சி துவங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.271 கோடி பரிவர்த்தனை செய்த தொழிலதிபர் வருமான வரித்துறையினரிடம் சிக்கினார்.

ராஜஸ்தானின் பில்வாராவில் தொழிலதிபராக இருப்பவர் கமலேஷ் ஆச்சார்யா. இவர், தனது நண்பர்களான வழக்கறிஞர்கள் விகாஸ் வியாஸ் மற்றும் தீபக் ஜோஷி ஆகியோருடன் இணைந்து ஒரு அரசியல் கட்சி துவக்கி உள்ளார்.

சுமார் மூன்று வருடங்களுக்கு முன் துவக்கப்பட்ட இக்கட்சியின் பெயர், ‘தேசிய சர்வ சமாஜ் கட்சி’. இதன் பின்னணியில் தமது கறுப்புப் பணத்தை மத்திய அரசிற்கு எந்த வகை வரிகளும் செலுத்தாமல் அவற்றை வெள்ளைப் பணமாக்குவது காரணமாக இருந்துள்ளது.

கட்சி துவக்கிய பின் அதன் பெயரில் கடந்த மூன்று வருடங்களில் ரூ.271 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதன் மீதானப் புகார்களினால், நேற்று இந்த மூவர் வீடுகளிலும் மத்திய வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்தக் கட்சி இதுவரை ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. கட்சியின் பெயரில் எங்கும் கூட்டம் நடத்தியதாகவும் தகவல்கள் இல்லை.

ஆனால், பில்வாராவில் இரண்டு வழக்கறிஞர்களும் அவர்களது நண்பரும் மூன்று ஆண்டுகளில் கட்சியின் கணக்கிலிருந்து ரூ.271 கோடி பரிவர்த்தனை செய்துள்ளனர். இந்த மூவரும் கட்சியின் வங்கிக் கணக்குகள் மூலமாக நன்கொடைகளுக்கான பணத்தைப் பெற்று வந்தனர். நன்கொடைகள் சேகரித்த பின், அதற்கான ஒரு குறிப்பிட்ட கமிஷனைக் கழித்து நன்கொடையாளர்களுக்குத் திருப்பித் தருவதை வழக்கமாக்கி உள்ளனர்.

அரசியல் கட்சியின் பெயரில் இந்த செயல்முறையின் மூலம், கருப்புப் பணம் சட்டப்பூர்வமாக வெள்ளை பணமாக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நன்கொடைகளை பெரும்பாலும் மும்பையின் சில ஆடிட்டர்கள் மூலமாக செய்துள்ளனர். இது வெளிச்சத்திற்கு வந்த பிறகு, வருமான வரித் துறை பில்வாராவிற்கு பின் மும்பையிலும் சோதனை நடத்தினர். பில்வாரா நடவடிக்கைக்கு முன்பாக, வருமான வரிக் குழு உத்தரபிரதேசத்தின் காசியாபாத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு தான் இந்த அரசியல் கட்சியின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் இருந்தது. அது பூட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும், பில்வாராவில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

Facebook Comments Box