மகாராஷ்டிராவில் அடுக்குமாடி வீடு இடிந்து விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 9 பேர் காயமடைந்துள்ளனர். 2 பேர் காணாமல் போயிருக்கின்றனர், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பால்கர் மாவட்டம், விரார் கிழக்கில் உள்ள நான்கு மாடி ரமாபாய் அடுக்குமாடி குடியிருப்பு செவ்வாய்க்கிழமை இரவு திடீரென இடிந்து விழுந்தது. இதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். காணாமல் போன 2 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக வசாய்-விரார் மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் சஞ்சய் ஹிர்வாடே பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
இந்நிலையில், இடிந்து விழுந்த அந்தக் கட்டிடத்தை கட்டிய 50 வயதான நைலி சேன் என்பவரை வசாய்-விரார் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்மீது கொலை முயற்சி மற்றும் அலட்சியம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள், காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட அவசர சேவைப் பிரிவுகள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்கள் விரார் மற்றும் நலசோபரா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சிலரின் நிலை மோசமாக உள்ளது.
கட்டிடம் இடிந்ததற்கான காரணங்களை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.