ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டார்

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மூன்று ஆண்டுகள் காலத்திற்கு இந்தப் பதவிக்கு நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அவர் அந்தப் பொறுப்பில் இருப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.

ரகுராம் ராஜனுக்குப் பிறகு, 2016 செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் 24-வது ரிசர்வ் வங்கி ஆளுநராக உர்ஜித் படேல் பொறுப்பேற்றார். ஆனால், தனிப்பட்ட காரணங்களால் 2018 டிசம்பர் 10-ஆம் தேதி தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே ராஜினாமா செய்தார். 1990-க்கு பிறகு பதவிக்காலத்தை முடிப்பதற்கு முன் ராஜினாமா செய்த முதல் ரிசர்வ் வங்கி ஆளுநர் இவர்தான்.

இதற்கு முன்பும் உர்ஜித் படேல் IMF-இல் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். 1996-1997 காலத்தில் IMF-இன் சார்பில் இந்திய மத்திய வங்கிக்கு பிரதிநிதியாக இருந்து, கடன் சந்தை மேம்பாடு, வங்கித் துறை சீர்திருத்தம், ஓய்வூதிய நிதி புதுப்பித்தல், அந்நியச் செலாவணி சந்தை உருவாக்குதல் போன்றவற்றில் ஆலோசனைகள் வழங்கினார்.

மேலும், 1998 முதல் 2001 வரை நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையில் ஆலோசகராகப் பணியாற்றியதோடு, பொது மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக வாரியம் அதன் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பை வகிக்கிறது. இதில் உறுப்பு நாடுகள் அல்லது குழுக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 24 நிர்வாக இயக்குநர்கள் இடம்பெறுகின்றனர்.

Facebook Comments Box