பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை தொழில் நிதியுதவி – பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு
பிஹார் மாநிலத்தில், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண் தன்னிச்சையாக தொழில் தொடங்க நிதி உதவி வழங்கும் புதிய திட்டத்தை முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
“முக்கியமந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா” எனப்படும் இந்த பெண்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம், மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான முன்மொழிவு சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகவும், திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவருக்கு தொழில் செய்யத் தொடக்க நிதியாக ரூ.10,000 வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். இந்த தொகை வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து பெண்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்.
ஆறு மாதங்களுக்கு பின் தொழில் முன்னேற்றம் மதிப்பீடு செய்யப்படும். அதன் அடிப்படையில் சிறப்பாக செயல்படும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை கூடுதல் நிதி உதவி வழங்கப்படும். மேலும், பெண்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய மாநிலம் முழுவதும், கிராம, நகர பகுதிகளில் சிறப்பு சந்தைகள் உருவாக்கப்படும்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட நிதிஷ்குமார்,
“2005 முதல் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறோம். அவர்கள் தன்னம்பிக்கை பெற்று, குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் பங்களித்து வருகின்றனர். இப்போது எடுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் பெண்களின் நலனுக்கு நீண்டகால பலனை வழங்கும். வேலைவாய்ப்புக்காக மாநிலத்தை விட்டு வெளியேறும் நிலையும் குறையும்” என்று குறிப்பிட்டார்.
இந்தத் திட்டம், நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீடமைப்பு துறையின் ஒத்துழைப்புடன், கிராமப்புற மேம்பாட்டு துறையின் கீழ் விரைவில் நடைமுறைக்கு வரும்.