பிஹார் பேரணியில் மோடிக்கு எதிராக அவதூறு – ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா
பிஹாரில் நடைபெற்ற ராகுல் காந்தியின் பேரணியில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மறைந்த அவரது தாயாரை குறிவைத்து அவதூறான வார்த்தைகள் பேசப்பட்டதாக அமித் ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். இது, ராகுல் காந்தி தொடங்கிய கீழ்த்தர அரசியலின் விளைவாகும் என்றும் அவர் கூறினார். இதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக ராகுல் காந்தி மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு யாத்திரை நடத்தி வருகிறார். தர்பங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தேஜஸ்வி யாதவ் பேசிய பின், மேடையில் உரையாற்றிய முகமது ரிஸ்வி, மோடியின் தாயாரை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து குவஹாத்தியில் பேசிய அமித் ஷா, “தனது பிள்ளைகளை உழைப்பால் வளர்த்த ஒரு தாயாரை அவமதிப்பது, காங்கிரஸின் மிகப் பெரிய வீழ்ச்சி. பொதுமக்கள் இதனை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ராகுல் காந்திக்கு வெட்கம், மானம் இருந்தால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். தற்போது மக்கள் அவரையும், அவரது கட்சியையும் வெறுப்புடன் பார்க்கின்றனர்” என்றார்.
மேலும், அசாமில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை எடுத்துக்காட்டிய அமித் ஷா, “காங்கிரஸ் முற்றிலும் அழிந்துவிட்டது. மாவட்டம், தாலுகா, பஞ்சாயத்து என அனைத்து நிலைகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே பெரும்பான்மையை பெற்றுள்ளது. மக்களவை, மாநில அவை, இடைத்தேர்தல் என எங்கும் பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெற்றி பெற்று வருகிறது” என வலியுறுத்தினார்.