அரசியல் விவாதங்கள் நச்சுத்தன்மை அடைந்துள்ளன: மாயாவதி கண்டனம்
நாட்டில் அரசியல் விவாதங்கள் நாளுக்கு நாள் நச்சுத்தன்மை நிறைந்ததாகவும், வன்முறை திசை நோக்கி மாறி வருவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கவலை தெரிவித்தார்.
பிஹாரில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் பேரணியில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரின் தாயார் குறித்து கூறப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாயாவதி தனது எக்ஸ் பதிவில்,
“கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாகத் தேர்தல் காலங்களில், அரசியல் பேச்சுக்கள் நச்சுத்தன்மையுடனும் வன்முறைப் போக்குடனும் நடைபெறுகிறது. இது மிகவும் வருத்தத்திற்குரியதும் கவலையூட்டுவதுமான ஒன்றாகும்.
அரசியல் கட்சிகள் தங்கள் சுயநலத்துக்காகவே செயல்படுவதால், நாட்டின் அரசியல் தரம் தொடர்ந்து வீழ்ச்சி அடைகிறது. அரசியல் என்பது மக்களின் நலனுக்காக இருக்க வேண்டும்; ஏழை, சாதாரண மக்கள் கோடிக்கணக்கானோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக கட்சிகள் தங்கள் கொள்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும்.
அதே சமயம், அரசாங்கம், அரசாங்கம் சாராத அமைப்புகள் மற்றும் உயர் பதவிகளில் உள்ளவர்களைப் பற்றி பகிரங்கமாக கூறப்படும் இழிவான, அநாகரிகமான கருத்துகள், தேசத்தின் மதிப்பையும் மரியாதையையும் பாதிக்கக்கூடும்.
சமீபத்தில் பிஹாரில் நிகழ்ந்த சம்பவங்கள் மிகுந்த கவலைக்குரியது. அனைவரின் நலனும் மகிழ்ச்சியுமே முதன்மை என வலியுறுத்திய அம்பேத்கர் சித்தாந்தத்தை பின்பற்றும் பஸ்பா எப்போதும் நச்சுத்தனமான அரசியலுக்கு எதிராகவே நிற்கிறது. ஒருவரை ஒருவர் இழிவுபடுத்தும் மலிவு அரசியல் முறைகளை தவிர்க்க வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.