சாலை விபத்துகளில் உயிரிழந்தோரில் 40% ஹெல்மெட், சீட் பெல்ட் அணியவில்லை: அறிக்கையில் தகவல்
2023-ம் ஆண்டில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 1,72,890 பேர் உயிரிழந்தனர். இதில் 40% க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாததால் உயிரிழந்துள்ளனர்; மேலும், மது அருந்தி வாகனம் ஓட்டியதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வருடாந்திர அறிக்கை தெரிவிக்கிறது.
2023-ம் ஆண்டில் உயிரிழந்த இருசக்கர வாகன ஓட்டிகளில் 54,568 பேர் ஹெல்மெட் அணியவில்லை. இதில் 39,160 பேர் பைக் ஓட்டுநர்கள், 15,408 பேர் பைக்கில் பயணிகள் ஆகும். இது அந்த ஆண்டின் மொத்த உயிரிழப்புகளில் 31.6% ஆகும்.
சீட் பெல்ட் அணியாத வாகன ஓட்டிகளில் 16,025 பேர் உயிரிழந்தனர். இதில் 8,441 பேர் ஓட்டுநர்கள், 7,584 பேர் பயணிகள். இது மொத்த உயிரிழப்புகளில் 9.3% ஆகும்.
குடிபோதை மற்றும் போதைப் பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியதால் 2023-ம் ஆண்டில் 3,674 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7,253 பேர் காயமடைந்தனர். மொத்த உயிரிழப்புகளில் இதன் பங்கு 2.1% ஆகும். 2022-ம் ஆண்டில் இதே காரணத்தால் 4,201 பேர் உயிரிழந்த நிலையில், 2023-ம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 12.5% குறைந்துள்ளது.
அதிவேகம் சாலை விபத்துகளுக்கான முக்கிய காரணமாக உள்ளது. 2023-ம் ஆண்டில் அதிவேகம் தொடர்பான விபத்துகள் மொத்த விபத்துகளில் 68.4% ஆகும். இதனால் உயிரிழப்புகள் 68.1% மற்றும் காயங்கள் 69.2% ஆக பதிவாகியுள்ளன.
ஒட்டுமொத்தமாக, குடிபோதை, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மொபைல் போன் பயன்பாடு போன்ற காரணங்கள் மொத்த விபத்துகளில் 3.9% மற்றும் உயிரிழப்புகளில் 4.3% பங்காற்றுகின்றன.