உத்தராகண்ட்: ருத்ரபிரயாக், சாமோலி மாவட்டங்களில் மேக வெடிப்பு – 8 பேர் மாயம்
உத்தராகண்டின் ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் மேக வெடிப்பின் காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல வீடுகள், பாலங்கள் இடிந்து விழுந்து, முதற்கட்ட தகவலின் படி 8 பேர் காணாமல் போயுள்ளனர்.
சாமோலி மாவட்ட தேவாலின் மொபாட்டா பகுதியில் தாரா சிங் மற்றும் அவரது மனைவி காணாமல் போயினர். அதே நேரத்தில் விக்ரம் சிங் மற்றும் அவரது மனைவி காயமடைந்தனர். வெள்ளத்தில் மாட்டுத் தொழுவும் இடிந்து விழுந்து, 15–20 மாடுகளுக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ருத்ரபிரயாக் மாவட்டத்தில், மேகவெடிப்பால் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர். அலக்நந்தா மற்றும் மந்தாகினி ஆறுகளின் சங்கமிக்கும் பகுதியில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. கேதார்நாத் பள்ளத்தாக்கில் லாரா கிராமத்தில் உள்ள பாலம் நீரோட்டத்தால் அழிந்துவிட்டது.
செனகாட்டிலும் நிலைமை கடுமையாக உள்ளது. ஆற்று நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட வீடுகளை காலி செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது. ருத்ரபிரயாக் ஹனுமான் கோயில் நீரில் மூழ்கியுள்ளது.
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்ட சமூக வலைப்பதிவில், “ருத்ரபிரயாக் மாவட்டம் பாசுகேதர் தாலுகா, சாமோலி மாவட்ட தேவால் பகுதிகளில் மேகவெடிப்பு மற்றும் வெள்ளத்தில் சில குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சோகமான செய்தி கிடைத்துள்ளது. நிலைமையை கையாள உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் நிர்வாகம் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிகாரிகளுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
ருத்ரபிரயாக் மாவட்ட ஆட்சியர் பிரதீக் ஜெயின், “பாசுகேதரில் பெய்த கனமழையால் நான்கு வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் யாரும் காணாமல் போகவில்லை. அனைத்து மக்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்” என்றார்.
கனமழை காரணமாக ருத்ரபிரயாக், பாகேஷ்வர், சாமோலி, ஹரித்வார் மற்றும் பித்தோராகர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளையும் இன்று மூட அரசு உத்தரவிட்டுள்ளது.