இந்தியா – ஜப்பான் நட்பு உறவு : வரலாறு, வர்த்தகம், கலாச்சாரம்
இந்தியாவின் மிகச் சீரிய நட்பு நாடாக ஆரம்ப காலத்திலிருந்தே ஜப்பான் இருந்து வருகிறது. இரு நாடுகளும் வர்த்தக, கலாச்சார ரீதியில் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு, இரு நாடுகளின் நட்புறவைப் பற்றிய செய்திகளை இங்கு காணலாம்.
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றுள்ளார். அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் இணைந்துள்ள குவாட் அமைப்பின் எதிர்காலம், பிராந்திய பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமராக பதவியேற்ற பின் மோடி ஜப்பான் செல்லும் இது 8வது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு முடிவடைந்த நிலையில், மோடியின் இந்த ஜப்பான் பயணம் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்தும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தியா – ஜப்பான் நட்பு பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது. கி.பி. 6ம் நூற்றாண்டில் பௌத்தம் ஜப்பானில் அறிமுகமான காலத்திலிருந்து இந்த உறவு துவங்குகிறது.
இதுகுறித்து ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர், பௌத்தம் வாயிலாக இந்திய கலாச்சாரம் ஜப்பானிய பண்பாட்டில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அதுவே இரு நாடுகளின் நட்பின் அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு உதாரணமாக ஜப்பானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் “நமஸ்தே இந்தியா” விழா குறிப்பிடப்படுகிறது.
வர்த்தக ரீதியிலும் ஜப்பான் இந்தியாவின் முக்கிய கூட்டாளி. இந்தியாவுடன் அதிகளவில் வர்த்தகம் செய்கிற நாடுகளில் ஜப்பான் 17வது இடத்திலும், ஜப்பானுடன் அதிக வர்த்தகம் செய்கிற நாடுகளில் இந்தியா 18வது இடத்திலும் உள்ளது.
2024-25 நிதியாண்டில் மட்டும் இரு நாடுகளும் ₹1.80 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் செய்துள்ளன. இதில், இந்தியா ஜப்பானுக்கு ₹45,000 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி செய்ததோடு, ₹1.30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் இறக்குமதியும் செய்துள்ளது.
மேலும், 2015ஆம் ஆண்டு மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில் இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்தன. அதன்பின்னர், 2021ல் 5G தொடர்பு தொழில்நுட்ப ஒப்பந்தம் கையெழுத்தானது. 2022ல் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா டெல்லி விஜயத்தின் போது, இந்தியாவில் 42 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்தார்.
இவ்வாறு வர்த்தகமும், கலாச்சாரமும் இணைந்து, ஜப்பான் இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக இருந்து வருகிறது. மோடியின் தற்போதைய ஜப்பான் பயணம், இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது.
இந்தியா – ஜப்பான் நட்பு உறவு : வரலாறு, வர்த்தகம், கலாச்சாரம் | AthibAn Tv