ஜம்மு – காஷ்மீரில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தின் 7 பேர் பலி

ஜம்மு – காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக வீடு இடிந்து, அதே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

அங்கு கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக நிலச்சரிவும், வெள்ளப்பெருக்குமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரியாசி மாவட்டத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 30) அதிகாலை 3 மணியளவில் கடுமையான நிலச்சரிவு நிகழ்ந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மண்ணுக்குள் புதையுண்டனர். அவர்களில் 5 குழந்தைகள் உட்பட அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கனமழை காரணமாக மீட்பு நடவடிக்கைகள் தாமதமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாஹோர் பகுதியில் இருந்த அந்த வீடு நிலச்சரிவில் சிக்கியது அதிகாலைத் தான் தெரியவந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். உயிரிழந்தவர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக மண்ணுக்குள் புதைந்திருந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, காஷ்மீரின் ராம்பன் மாவட்டம் ராஜ்காட் பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காணாமல் போயுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments Box