கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி – ஆர்சிபி அறிவிப்பு
ஐபிஎல் 2025 சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, தனது வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 ரசிகர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஆர்சிபி தனது எக்ஸ் (X) பதிவில் தெரிவித்ததாவது:
“ஜூன் 4, 2025 அன்று எங்கள் இதயங்கள் நொறுங்கின. எங்கள் குடும்பத்தின் ஓர் அங்கமாக இருந்த 11 பேரை நாங்கள் இழந்தோம். அவர்கள் எங்கள் அணிக்கும், எங்கள் நகரத்துக்கும், எங்கள் சமூகத்துக்கும் தனித்துவமானவர்கள். அவர்களின் இல்லாமை எங்களை என்றும் துயருறச் செய்யும்.
எந்த நிதி ஆதரவும் அவர்களின் இடத்தை நிரப்ப முடியாது. எனினும், எங்களின் முதல் படியாகவும் ஆழ்ந்த மரியாதையின் அடையாளமாகவும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் வழங்குகிறோம். இது வெறும் நிதி உதவி அல்ல, இரக்கம், ஒற்றுமை, தொடர்ச்சியான அக்கறையின் சின்னமாகும்.
இது ‘RCB Cares’ என்ற முயற்சியின் தொடக்கம். அவர்களின் நினைவுகளை காக்கும் விதமாக இதை ஆரம்பிக்கிறோம். RCB எடுக்கும் ஒவ்வொரு அடியும், ரசிகர்கள் உணரும் பாசம், எதிர்பார்ப்பு, உரிமையை பிரதிபலிக்கும். ‘RCB Cares’ குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் பகிரப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரின் சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆர்சிபியின் சாம்பியன் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.