100-க்கும் மேற்பட்ட ஊடுருவல் முயற்சிகளுக்குப் பங்காற்றிய ‘மனித ஜிபிஎஸ்’ பாகு கான் சுட்டுக் கொலை!
பயங்கரவாதிகளால் ‘மனித ஜிபிஎஸ்’ என்று அழைக்கப்பட்ட பாகு கான், ஜம்மு காஷ்மீரின் குரேஸ் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் 100-க்கும் மேற்பட்ட ஊடுருவல் முயற்சிகளுக்கு மூளையாக செயல்பட்டவர்.
பாகு கான், சமந்தர் சாச்சா என்றும் அழைக்கப்படுகிறார், 1995 முதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்தார். நீண்ட காலமாக ஊடுருவல் முயற்சிகளுக்கு மூளையாக செயல்பட்ட இவர், நவ்ஷேரா நார் பகுதியில் இன்று நடந்த ஒரு ஊடுருவல் முயற்சியில் மற்றொரு பயங்கரவாதியுடன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குரேஸ் பகுதியின் கடின நிலப்பரப்புகள் மற்றும் ரகசிய வழிகளை நன்கு அறிந்த பாகு கான், இதனால் அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கும் முக்கிய நபராக விளங்கினார்.
பாகு கான் ஹிஸ்புல் தளபதியாக இருந்தபோது, குரேஸ் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் எல்லை வழியாக ஊடுருவல் நடவடிக்கைகளை திட்டமிடுவதிலும், செயல்படுத்துவதிலும் அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கும் உதவி செய்தவர். பல ஆண்டுகள் பாதுகாப்புப் படையினரிடமிருந்து தப்பித்த பாகு கான் கொல்லப்பட்டதால், அப்பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் வலையமைப்புக்கு பெரிய தாக்கம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.