“சமீபத்திய வெள்ளப் பெருக்கு மக்கள் மனங்களில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது” – ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் உரை
கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் வெள்ளமும், நிலச்சரிவுகளும் காரணமாக பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டதை நாம் கண்டிருக்கிறோம். இப்படியான இயற்கை பேரிடர்கள் ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்தையும் வலி கொண்டதாக்கியுள்ளன என பிரதமர் மோடி, தனது மனதின் குரல் வானொலி உரையில் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார் பிரதமர். இன்று ஒலிபரப்பானது அந்த நிகழ்ச்சியின் 125வது பகுதியாகும்.
நிகழ்ச்சியின் போது பிரதமர் கூறியதாவது:
“இந்த மழைக்காலத்தில், இயற்கையின் சவால்கள் நாடு முழுவதையும் சோதித்து வருகின்றன. கடந்த வாரங்களில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற காரணங்களால் நாட்டின் பல இடங்களில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வீடுகள் இடிந்து விழுந்தன, விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின, பல குடும்பங்கள் அழிந்தன.
முடிவில்லாமல் கொட்டிய மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாலங்களும் சாலைகளும் அடித்துச் செல்லப்பட்டன. மனிதர்கள் உயிர் ஆபத்தில் சிக்கினர். இந்த துயர சம்பவங்கள் ஒவ்வொரு இந்தியரின் மனதையும் வலியடையச் செய்துள்ளன. அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களின் வேதனையை நாமெல்லாரும் பகிர்ந்து கொள்கிறோம்.
பேரிடர் ஏற்பட்ட இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில மீட்புப் படை மற்றும் பாதுகாப்புப் படையினர் இரவுநேரம் பாராது உழைத்து மக்களை மீட்டனர். வெப்கேம்கள், கண்டுபிடிப்பான் கருவிகள், மோப்ப நாய்கள், ட்ரோன் கண்காணிப்புகள் போன்ற தொழில்நுட்பங்களின் உதவியுடன் மீட்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.
நிவாரண காலங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு மற்றும் மருந்துகள் அனுப்பப்பட்டன. காயமடைந்தவர்கள் விமானத்தில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். ஆயுதப்படைகள், உள்ளூர் மக்கள், சமூகத்தினர்கள், மருத்துவர்கள், நிர்வாகம் ஆகியோர் அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தனர். இந்த சவாலான சூழ்நிலையில் மனிதநேயத்திற்கு முன்னுரிமை கொடுத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.” என பிரதமர் கூறினார்.
இந்த ஆண்டின் பருவமழை தொடங்கியதிலிருந்து இந்தியாவின் பல பகுதிகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் கனமழையால் மிகுந்த சேதத்தை சந்தித்துள்ளன. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 26 அன்று ஜம்மு-காஷ்மீரில் வைஷ்ணவி தேவி ஆலயம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் 30 பேர் உயிரிழந்ததோடு, 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இமாச்சலப் பிரதேசத்தில் ஆகஸ்ட் 28 நிலவரப்படி, நிலச்சரிவு, திடீர் வெள்ளம் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்த சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது.