குடியரசு துணைத் தலைவர் தேர்தல் முன்னிட்டு செப்.8-ஆம் தேதி தேஜகூ எம்.பி.க்களுக்கு பிரதமரின் இரவு விருந்து

செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, செப்டம்பர் 8-ஆம் தேதி, தேசிய ஜனநாயக கூட்டணி (தேஜகூ) எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு இரவு விருந்தினை ஏற்பாடு செய்துள்ளார்.

தேஜகூ வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின்படி, “குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு முந்தைய நாள், எம்.பி.க்கள் அனைவரும் ஒருமித்த மனப்பான்மையுடன் பங்கேற்கும் வகையில் பிரதமர் மோடி இரவு விருந்தினை வழங்குகிறார். கூட்டணிக்குள் ஒற்றுமையை வலுப்படுத்தவும், பரஸ்பர நெருக்கத்தை மேம்படுத்தவும் இத்தகைய நிகழ்வுகள் வழக்கமாக சிறப்பான பலனை அளித்து வருகின்றன. எங்கள் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் மீது அனைத்து கூட்டணி கட்சிகளும் முழு ஆதரவைத் தெரிவித்திருந்தாலும், வாக்களிக்கும் நாளில் எம்.பி.க்களில் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த இந்த விருந்து உதவும்,” என கூறப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி தனது வேட்பாளராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் மற்றும் தற்போதைய மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை நிறுத்தியுள்ளது. இதேசமயம், எதிர்க்கட்சிகள் தெலங்கானாவைச் சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்துள்ளன.

வாக்கு நிலவரம்

செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மொத்தம் 782 எம்.பி.க்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் 542 பேர் மக்களவையிலும், 240 பேர் மாநிலங்களவையிலும் உள்ளனர்.

வெற்றி பெற குறைந்தது 392 எம்.பி.க்களின் வாக்குகள் தேவைப்படுகிறது. தற்போது மக்களவையில் மத்திய அரசுக்கு 293 எம்.பி.க்கள் ஆதரவாக உள்ளனர். மாநிலங்களவையில் 134 எம்.பி.க்களும் ஆதரவு தருகின்றனர். இதனால் மொத்தம் 427 எம்.பி.க்கள் மத்திய அரசின் பக்கம் உள்ளனர் என மதிப்பிடப்படுகிறது.

எதிர்க்கட்சிகளுக்கு மக்களவையில் 249 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 106 எம்.பி.க்களும் உள்ளனர். மொத்தம் 355 எம்.பி.க்கள் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் ஆகின்றனர்.

Facebook Comments Box