பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்கள்? – தேர்தல் ஆணையம் விளக்கம்
பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் பெருமளவில் போலி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர் என்ற செய்திகளை மாநில தலைமை தேர்தல் அதிகாரி மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் இறுதியானது அல்ல. இது பொதுமக்கள் பார்வைக்காகவும், அரசியல் கட்சிகள் மற்றும் வாக்காளர்களிடமிருந்து கருத்துக்கள், ஆட்சேபனைகள் பெறுவதற்காகவும் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
வரைவு பட்டியலை அடிப்படையாக கொண்டு அவை ‘இறுதி’ அல்லது ‘சட்டவிரோதம்’ என்று கருத இயலாது. ஏனெனில், சட்டப்படி வரும் ஆட்சேபனைகள், உரிமைகோரல்கள் அனைத்தையும் பரிசீலித்து, தேர்தல் பதிவு அதிகாரிகள் சரிபார்த்த பின் தான் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
சில ஊடகங்களில் 15 தொகுதிகளில் 67,826 போலி வாக்காளர்கள் உள்ளனர் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ஆவணங்கள் மற்றும் கள சரிபார்ப்பு இன்றி இவ்வாறான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முடியாது. குறிப்பாக கிராமப்புறங்களில் ஒரே மாதிரியான பெயர்கள், பெற்றோர் பெயர்கள், வயது ஒற்றுமை போன்றவை பொதுவாக காணப்படும்.
வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்கள் அனைத்தும் களத்தில் சரிபார்க்கப்படும். ஒத்த பதிவுகள் இருப்பின் அவை கண்டறியப்பட்டு நீக்கப்படும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வாக்காளர்கள் தங்களின் ஆட்சேபனைகளை தேர்தல் பதிவு அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.
மக்கள்தொகை அடிப்படையில் ஒத்த பதிவுகளை கண்டறிய ERONET 2.0 மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. அதன் பின் பூத் நிலை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பதிவு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உறுதிப்படுத்துவார்கள். இதனால் உண்மையான வாக்காளர்களின் உரிமை பறிக்கப்படாமல் இருக்கும்.
வால்மீகி நகரில் 5,000 போலி வாக்காளர்கள் உள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களுடன் விவரம் அளிக்க வேண்டும். ஆதாரம் இல்லாமல் எண்களைச் சொல்லுவது பொருத்தமல்ல.
மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கில் போலி வாக்காளர்கள் உள்ளனர் என்ற பொது ஊகங்கள் சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. நீதிமன்றங்களும் பலமுறை ‘பெரிய அளவில் போலி வாக்குகள்’ என்ற குற்றச்சாட்டுகள் புள்ளிவிவர அடிப்படையில் அல்ல, ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளன” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.