ஜம்முவின் தாவி ஆற்றில் 12 மணி நேரத்தில் புதிய பாலம்: இந்திய ராணுவத்தின் சாதனை
ஜம்முவில் சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம், அப்பகுதி போக்குவரத்துக்கு முக்கியமான தாவி ஆற்றுப் பாலம் எண் 4-ன் கிழக்கு பகுதியை கடுமையாக சேதப்படுத்தியது. அதை பழுது பார்த்தால் நீண்ட காலம் ஆகும் என்பதால், ராணுவத்தின் புலிகள் பிரிவு பொறியாளர்கள் சவாலான சூழலில் 110 அடி நீளமுள்ள பெய்லி (தற்காலிக) பாலத்தை வெறும் 12 மணி நேரத்தில் கட்டி முடித்தனர்.
ஆகஸ்ட் 26 முதல் ரைசிங் ஸ்டார் படைப்பிரிவினர், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களின் உதவியுடன், மோசமான வானிலை நிலையிலும் பலரை பாதுகாப்பாக மீட்டனர். இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 1,000 பேர் அபாயத்திலிருந்து காப்பாற்றப்பட்டனர்.
மேலும், மாற்று ஆப்டிகல் பைபர் கேபிள்கள் பதிக்கப்பட்டதால் ஜம்மு மற்றும் நகருக்கிடையேயான முக்கிய தொலைதொடர்பு சேவைகள் மீண்டும் இயங்கத் தொடங்கின. அதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு, மருந்து, நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டதாக மேஜர் ஜெனரல் முகேஷ் பன்வாலா தெரிவித்தார்.