தெருநாய் வழக்கால் உலகம் அறிந்துவிட்டது: உச்ச நீதிமன்ற நீதிபதி நகைச்சுவை உரை
டெல்லி – என்சிஆர் பகுதிகளில் தெருநாய்கள் பலருக்கு தொந்தரவு ஏற்படுத்துவதோடு, குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்ததால் புகார்கள் எழுந்தன.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, ஆகஸ்ட் 11-ம் தேதி, “டெல்லி – என்சிஆர் பகுதிகளில் தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் பராமரிக்க வேண்டும். மீண்டும் அவற்றை தெருக்களில் விடக் கூடாது” என்று உத்தரவிட்டது.
இதற்கு எதிராக செல்லப்பிராணி அன்பர்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். நாடு முழுவதும் இது பெரும் விவாதமாக மாறியது. பின்னர், இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.வாய். சந்து கவாய் கவனத்துக்கு சென்றதால், அவர் அதை நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றினார்.
பின்னர், ஆகஸ்ட் 22-ம் தேதி நீதிபதி விக்ரம் நாத் தீர்ப்பளித்தபோது, “பிடிக்கப்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போட்டு மீண்டும் அப்பகுதிகளில் விட வேண்டும். தெருநாய்களுக்கு பொது இடங்களில் மக்கள் உணவளிக்கக் கூடாது. அதற்காக மாநகராட்சி தனி இடம் ஒதுக்கி, ‘நாய்களுக்கு உணவளிக்கும் இடம்’ என்ற பலகைகள் வைக்க வேண்டும்” என்று கூறினார். இந்த தீர்ப்பு பெருமளவு பாராட்டுகளை பெற்றது.
இதையடுத்து, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் நீதிபதி விக்ரம் நாத் பேசியதாவது:
“தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரித்ததன் மூலம், இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நான் அறியப்பட்டுவிட்டேன். எதிர்பாராத விதமாக பிரபலமாகி விட்டேன். பலரும் பாராட்டினார்கள். நீதித்துறையில் இருப்பது எனக்குத் தெரிந்த விஷயம், ஆனால் இப்போது பரவலாக மக்கள் அறிந்திருக்கிறார்கள். இதற்காக தெருநாய்களுக்கும் நன்றி செலுத்துகிறேன்.
இந்த வழக்கை எனது அமர்வுக்கு மாற்றியமைத்த தலைமை நீதிபதி கவாய்க்கும் நன்றி. வெளிநாடுகளில் இருந்து பாராட்டியவர்களுக்கும் நன்றி,” என அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, வரும் 2027 பிப்ரவரியில் விக்ரம் நாத் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளார்.