சிபிஐ விசாரித்த 7,000-க்கும் அதிகமான ஊழல் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் – மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்
மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட்ட சமீபத்திய ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சிபிஐ விசாரித்த 7,000-க்கும் மேற்பட்ட ஊழல் தொடர்பான வழக்குகள் தற்போது விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இதில் மட்டும் 379 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்ப்பு இன்றி உள்ளன.
2024 இறுதி நிலவரப்படி நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளில்:
- 1,506 வழக்குகள் 3 ஆண்டுகளாக,
- 791 வழக்குகள் 3 முதல் 5 ஆண்டுகள்,
- 2,115 வழக்குகள் 5 முதல் 10 ஆண்டுகள்,
- 2,660 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்ததும், சிபிஐ தாக்கல் செய்ததும் சேர்த்து 13,100-க்கும் அதிகமான மேல்முறையீட்டு மனுக்கள் பல்வேறு உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இதில்,
- 666 மனுக்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக,
- 1,227 மனுக்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக,
- 2,989 மனுக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக,
- 4,059 மனுக்கள் 5 முதல் 10 ஆண்டுகள்,
- 1,778 மனுக்கள் 2 முதல் 5 ஆண்டுகள்,
- 2,441 மனுக்கள் 2 ஆண்டுகளுக்குள் நிலுவையில் உள்ளன.
2024-ம் ஆண்டில் மட்டும் 644 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் 392 வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டது; 154 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். அந்த ஆண்டின் தண்டனை சதவீதம் 69.14% ஆகும்.
அதேநேரத்தில், ஊழல் அல்லாத வழக்குகள் உட்பட மொத்தம் 11,384 வழக்குகள் விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. கடந்தாண்டு சிபிஐ 807 புதிய வழக்குகளை பதிவு செய்தது. அதே ஆண்டில் 1,005 வழக்குகளின் விசாரணை முடிக்கப்பட்டது. எனினும், 2024 இறுதி நிலவரப்படி 529 ஊழல் வழக்குகளின் விசாரணைகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
வழக்குகள் பதிவு செய்யப்பட்ட ஓராண்டுக்குள் விசாரணையை நிறைவு செய்ய வேண்டும் என்ற நெறிமுறை இருந்தாலும், பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்படுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.