இந்திய ட்ரோன்கள் உலகை ஆச்சரியப்படுத்தும் சாதனை – அமெரிக்கா, சீனாவாலும் கண்காணிக்க இயலாது!

நாட்டின் பாதுகாப்பு துறையில் ட்ரோன்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்தியாவில் உருவாக்கப்படும் ட்ரோன்கள் வான்வெளியில் பறக்கும் போது, அவற்றைக் கண்டறிய அமெரிக்கா, சீனாவிற்கே கூட சாத்தியமில்லை” என தெரிவித்தார்.

உத்தரபிரதேசம் கௌதம் புத்த நகரில், ட்ரோன் தயாரிப்பு நிறுவனம் Raphe mPhibr நாட்டிலேயே மிகப்பெரிய Aero Engine Test Bed-ஐ அமைத்துள்ளது. இதைத் தொடங்கி வைத்தார் ராஜ்நாத் சிங். அப்போது பேசிய அவர், “இந்திய ட்ரோன்கள் புதிய தொழில்நுட்பப் புரட்சியின் அடையாளமாக உருவெடுத்து வருகின்றன” என்றார்.

“பொதுவாக விமானம் என்றால், தேஜாஸ் அல்லது ரஃபேல் போன்ற போர் விமானங்களே நமக்கு நினைவிற்கு வரும். ஆனால் பாதுகாப்புத்துறையில் இன்று மாறிவரும் சக்தியாக ட்ரோன்கள் உருவெடுத்துள்ளன. இன்றைய இளைஞர்கள் நிறுவனங்களைத் தொடங்குவதில் மட்டுமல்லாமல், பாதுகாப்புத்துறைக்கே புதிய சிந்தனைகள் மற்றும் பாதைகளை உருவாக்கி வருகின்றனர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் பறக்கும் போது, உலகின் முன்னணி நாடுகளுக்கே கூட அவற்றை கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது மிகப்பெரிய முன்னேற்றம்” என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

போர்க் கொள்கையில் ட்ரோன்களைச் சேர்ப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது என்றும், நவீன போர்களில் அவை மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் அவர் வலியுறுத்தினார். ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ட்ரோன்கள், இந்தியாவின் வலிமையை வெளிப்படுத்துகின்றன என்றார்.

ட்ரோன்களின் வரலாற்றை எடுத்துரைத்த அவர், ஆரம்பத்தில் அவை கண்காணிப்பு மற்றும் உளவு நோக்கங்களுக்கே பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் இன்றைய சூழலில் அவை நேரடியாக போர்க்களத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்றும் கூறினார். ரஷ்யா-உக்ரைன் போர் அதற்கே சான்று எனவும் விளக்கினார்.

மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தான் செலுத்திய ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு ரேடார்களை வானிலேயே தாக்கி அழித்த ஸ்கை ஸ்ட்ரைக்கர் ட்ரோன்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்தன. இதுபோன்ற ட்ரோன்கள் பல பாதுகாப்பு வீரர்களின் உயிர்களை காப்பாற்றியுள்ளன. அதனால் தான், ட்ரோன்கள் “அடுத்த தலைமுறை ஆயுதம்” எனக் கருதப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

Facebook Comments Box