“வாக்கு மோசடி… பாஜகவுக்கு எதிராக ஹைட்ரஜன் வெடிகுண்டு வரும்!” – பீகார் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு
பாஜகவை நோக்கி, அணுகுண்டை விட வலிமையான ஹைட்ரஜன் குண்டு விரைவில் வெடிக்க இருக்கிறது. வாக்குகள் எப்படிக் களவாடப்படுகின்றன என்பதன் உண்மை விரைவில் வெளிப்படும் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடாக, தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு, காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்த திருத்த நடவடிக்கையின் மூலம் இறந்தவர்கள், முகவரி மாற்றியவர்கள், இருமுறை பதிவு செய்தவர்கள், மாநிலத்தை விட்டு வெளியேறியவர்கள், இந்தியர் என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் இல்லாதவர்கள் என சுமார் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக ஆணையம் விளக்கியது.
இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள், வாக்களிக்கும் உரிமை கொண்டவர்களையே நீக்குகிறது, மேலும் பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயற்படுகிறது என குற்றம் சாட்டின. இதையடுத்து, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ஆகஸ்ட் 17ஆம் தேதி பீகாரின் சாசராமில் இருந்து ஒரு பயணத்தைத் தொடங்கினார். இந்த பயணம் பீகாரின் 110 சட்டமன்றத் தொகுதிகள், 25 மாவட்டங்கள் வழியாக 1,300 கி.மீ தூரம் சென்றது.
இந்தப் பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 1) தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் கார்கே, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் மற்றும் முதல்வர் ஹேமந்த் சோரன், ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஐ-யின் ஆனி ராஜா, சிபிஎம் பொதுச் செயலாளர் பேபி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி யூசுப் பதான், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) சஞ்சய் ராவத் உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “அரசியலமைப்பை பாஜகவால் சிதைக்க அனுமதிக்க மாட்டோம். அதனால்தான் இந்த யாத்திரை நடத்தப்பட்டது. மக்களிடமிருந்து மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. எண்ணற்ற மக்கள் இதில் பங்கேற்று ‘வாக்கு மோசடி’ குறித்து முழக்கமிட்டனர்.
பாஜகவிடம் நான் ஓர் எச்சரிக்கை சொல்ல விரும்புகிறேன். அணுகுண்டை விட சக்தி வாய்ந்த ஆயுதம் ஹைட்ரஜன் குண்டு. பாஜகவினரே, தயார் ஆகுங்கள்! ஒரு ஹைட்ரஜன் குண்டு உங்கள்மீது விழப்போகிறது. விரைவில் வாக்கு மோசடியின் உண்மை மக்கள் முன்னே வெளிப்படும். அப்போது பிரதமர் மோடி மக்களிடம் கண்முன் நிற்க முடியாது – இது நிச்சயம்.
வாக்கு மோசடி என்றால் அது உரிமைகள் பறிப்பு, ஜனநாயகத்தை பறிப்பு, வேலை வாய்ப்பை பறிப்பு ஆகும். எனவே, பீகார் இளைஞர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.