மிசோரம் – அஸ்ஸாம் இணைப்பு: ரூ.8,071 கோடியில் பைரபி–சாய்ரங் ரயில் பாதை!

மிசோரம் தலைநகர் ஐஸ்வாலை, அஸ்ஸாமின் சில்சாருடன் இணைக்கும் வகையில் 51.38 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்ட பைரபி–சாய்ரங் புதிய ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 13-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக இந்திய ரயில்வே மேற்கொள்ளும் முக்கிய திட்டங்களில், மிசோரம் தலைநகரை இணைக்கும் இத்திட்டம் முக்கிய இடம் பெறுகிறது. மியான்மர், வங்கதேசம் மற்றும் திரிபுரா, அஸ்ஸாம், மணிப்பூர் மாநிலங்களுடன் எல்லை பகிர்ந்து கொள்கின்ற மிசோரம், இத்துடன் ரயில் தொடர்பை பெறுகிறது.

2008-ல் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் ரூ.8,071 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டது. 2014 வரை பைரபிவரை மட்டுமே ரயில் பாதை இருந்த நிலையில், அதன் பின் முக்கிய பணிகள் தொடங்கி சுமார் 10 ஆண்டுகளில் நிறைவு பெற்றது.

புதிய பாதையில் 48 சுரங்கங்கள், 55 பெரிய பாலங்கள், 87 சிறிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக குராங் ஆற்றின் மீது 371 மீ நீளம், 114 மீ உயரத்தில் அமைக்கப்பட்ட பாலம், நாட்டின் இரண்டாவது உயர்ந்த ரயில் பாலமாகும். இது குதுப் மினாரை விட 42 மீட்டர் உயரமானது. ஜம்மு–காஷ்மீரின் செனாப் பாலமே முதலிடம் வகிக்கிறது.

பைரபி, ஹார்டுகி, கவ்னபுய், முகல்காங், சாய்ரங் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்ற நிலையில், பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.

வடகிழக்கு ரயில்வே அதிகாரி நிலஞ்சன் தேப் கூறியதாவது: “ஆண்டுக்கு நான்கு மாதங்கள் மட்டுமே பணிகளை மேற்கொள்ள முடிந்தது என்பதால் இது கடினமான சவாலாக இருந்தது. அஸ்ஸாம், ஒடிசா மாநிலங்களில் இருந்து கட்டுமானப் பொருட்களை கொண்டு வர வேண்டி இருந்தது. மலைப்பகுதிகளில் பணிகளை மேற்கொள்வதற்காக 200 கிமீக்கு சாலைகள் அமைக்கப்பட்டன. இந்த ரயில் பாதை சுற்றுலாவை அதிகரிக்கும்” என்றார்.

தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி செந்தமிழ்ச்செல்வன் தெரிவித்ததாவது: “புதிய ரயில் பாதையால் பயணச் செலவு குறையும். மிசோரம் உட்பட வடகிழக்கு மாநில மக்கள் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு அதிக அளவில் வருவார்கள். அதேபோல் தென்மாநில மக்கள் சுற்றுலாவுக்காக மிசோரம் செல்லவும் வசதியாகும். இந்த பாதை மின்மயமாக்கும் பணி தொடங்கப்பட்டு, ஓராண்டில் நிறைவு பெறும்” என்றார்.

புதிய பாதை மூலம் ரூ.12 செலவில், 1.30 மணி நேரத்தில் சாய்ரங்கில் இருந்து பைரபி சென்று விட முடியும். இதே தூரத்தை சாலையில் கடக்க 3 மணி நேரமும் குறைந்தது ரூ.60 செலவும் ஆகிறது.

மேலும், மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களை சமாளிக்கும் வகையில், ஜியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா மற்றும் ஐஐடி–ரூர்க்கி நிபுணர்கள், தமிழக தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து திட்டத்தை கண்காணித்து, சிக்னல் மற்றும் தகவல் தொடர்பு பணிகளைச் செய்துள்ளனர்.

Facebook Comments Box