இந்திய கலாச்சாரம், சட்டங்களை ஏற்றுக்கொள்ளும் முஸ்லிம்களுக்கு சிக்கல் இல்லை: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா

“இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சட்டங்களை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண்டால் அதில் எந்த பிரச்சினையும் இல்லை” என்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

தெற்கு அசாமின் ஸ்ரீபூமி மாவட்டத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். 2024 நவம்பர் மாதம் வரை இந்த மாவட்டம் கரீம்கஞ்ச் என அழைக்கப்பட்டது. அதிகளவில் இஸ்லாமியர்கள் வாழும் இந்த மாவட்டம், வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.

நிகழ்ச்சிக்குப் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்,

“இந்தியாவை தாய்நாடு என்று கருதும் முஸ்லிம்கள் எங்களுடன் இருக்கிறார்கள். அவர்கள் இந்த தேசத்தின் கலாச்சாரம், சட்டங்களை ஏற்றுக்கொண்டால் எந்த சிக்கலும் இருக்காது.

ஆனால், அதனை ஏற்க சிலருக்கு சிரமமாகிறது; அதுவே சிக்கல். பராக் பள்ளத்தாக்கில் வாழும் ஒருவர் வங்கதேச வானொலி கேட்பதை ஏற்க முடியாது. அதற்குப் பதிலாக அகில இந்திய வானொலியை கேட்டு மகிழ வேண்டும்” என்றார்.

முன்னதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர்,

“தாகூரின் பாடலை பயமின்றி பாடும் போது, கரீம்கஞ்ச் என்பதற்குப் பதிலாக ஸ்ரீபூமி என்று சொல்வது மதச்சார்பின்மை உணர்ச்சியை வெளிப்படுத்தும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Facebook Comments Box