தென்னிந்தியாவின் 4 முக்கிய நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் திட்டம்
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
மத்திய அரசு, ஹைதராபாத், அமராவதி, சென்னை, பெங்களூரு ஆகிய தென்னிந்தியாவின் 4 தலைநகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் திட்டத்திற்கான சர்வே மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், சுமார் 5 கோடி மக்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்ட ஆய்வுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சென்னையிலிருந்து பெங்களூருவை வெறும் 2 மணி நேரத்தில் சென்றடைய முடியும். அதேபோல், ஹைதராபாத்திலிருந்து பெங்களூருவையும் 2 மணி நேரத்தில் அடையலாம் என கூறப்படுகிறது.
தற்போது, மும்பை–அகமதாபாத் புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனை மேலும் 7,000 கிலோமீட்டர் தூரத்திற்கு விரிவாக்கம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மேலும், டெல்லி–வாராணசி, மும்பை–ஹைதராபாத், சென்னை–மைசூரு உள்ளிட்ட வழித்தடங்களிலும் புல்லட் ரயில் அமைக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.