மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் : “எங்களை வெளியேற்ற முயன்றால் கடும் விளைவுகள்” – மனோஜ் ஜாரங்கி எச்சரிக்கை
“இடஒதுக்கீட்டு கோரிக்கை நிறைவேறும் வரை எங்களின் போராட்டம் தொடரும். போராட்டக் களத்தில் இருந்து எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றால் அதற்கு கடுமையான விளைவுகள் ஏற்படும்” என்று மகாராஷ்டிர அரசுக்கு மராத்தா சமூகத்தினரின் தலைவராக விளங்கும் மனோஜ் ஜாரங்கி எச்சரித்துள்ளார்.
ஓபிசி பிரிவின் கீழ் மராத்தா சமூகத்திற்கு 10% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதையும், மராத்தாக்களை குன்பி இனத்தின் துணை சாதி என்று அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பதையும் கோரி, மனோஜ் ஜாரங்கி ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவருக்கு ஆதரவாக மாநிலம் முழுவதிலிருந்தும் மக்கள் மும்பை வந்தடைந்து, ஆசாத் மைதானம் மட்டுமின்றி சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல், சாலைகள், பூங்காக்கள் உள்ளிட்ட பல பொது இடங்களிலும் திரண்டு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனால் தெற்கு மும்பை பகுதியில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக அதிகரித்துள்ளதாகவும், வாகன ஓட்டிகள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்றும் புகார்கள் எழுந்தன.
இந்த நிலைமையில் நேற்று (செப்டம்பர் 1) விசாரணை நடத்திய மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ரவீந்திர குகே, கவுதம் அன்காட் தலைமையிலான அமர்வு, “போராட்டம் அமைதியானதாக இல்லை, நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன” எனக் குற்றஞ்சாட்டியது. மேலும், “நாளை (செப்டம்பர் 2) நண்பகலுக்குள் வீதிகளை காலி செய்து இயல்புநிலையை மீட்டெடுக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. உரிய அனுமதி பெறாமல் போராட்டம் நடக்கிறது. எனவே அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தை உடனடியாக நிறுத்தி இடத்தை காலி செய்ய வேண்டும் என மும்பை காவல்துறையினர் இன்று மனோஜ் ஜாரங்கி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். போராட்டம் தொடங்குவதற்கு முன் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டதால், நீதிமன்ற வழிகாட்டுதலின் படியே நோட்டீஸ் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த மனோஜ் ஜாரங்கி, “மகாராஷ்டிர அரசுடன் உரையாட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் மாறாக எங்களை கைது செய்யவோ வெளியேற்றவோ முயன்றால், அதற்கான கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். என் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நான் இங்கிருந்து நகர மாட்டேன்.
ஏழை மராத்தா சமூகத்துக்கு நீதிமன்றம் நீதி வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை எங்களால் முடிந்தவரை பின்பற்றி வருகிறோம். இங்கே 4,000–5,000 போராட்டக்காரர்கள் உள்ளனர். எங்களை தங்க வைக்க விரும்பினால், அரசே எங்களுக்கு வீடுகளை வழங்கட்டும். முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை வழங்கியுள்ளார். அதற்கான விலையை அவர் கட்ட வேண்டியிருக்கும்” என எச்சரித்தார்.