வன்முறைக்கு பிறகு முதன்முறையாக மணிப்பூருக்கு செப்.13-ம் தேதி பிரதமர் மோடி பயணம் செய்ய வாய்ப்பு?

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் வெடித்த வன்முறைக்கு பிறகு, முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அங்கு வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, பிரதமர் மோடி வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு செல்வார் என, மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலில் மோடி, புதிதாக அமைக்கப்பட்ட பைரபி–சாய்ராங் ரயில் பாதையை திறந்து வைக்க மிசோரம் மாநிலத்துக்கு செல்ல உள்ளார்.

2023 மே மாதத்தில் மணிப்பூரில் இரண்டு இனக்குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், சுமார் 60,000 பேர் இடம்பெயர்ந்தனர். இந்த வன்முறைக்குப் பிறகு பிரதமர் மணிப்பூருக்கு செல்லாததை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன.

இந்நிலையில், இப்போது முதல் முறையாக பிரதமர் அங்கு வரவுள்ளதாக மிசோரம் அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், மோடியின் பயண அட்டவணை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. மணிப்பூர் தலைநகர் இம்பாலின் அதிகாரிகளும் இதை உறுதிப்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையில், பிரதமரின் பயணத்திற்கான முன்னேற்பாடுகளை மதிப்பாய்வு செய்வதற்காக மிசோரம் தலைமைச் செயலர் கில்லி ராம் மீனா, சட்ட அமலாக்க அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக அந்த கூட்டத்தில் விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments Box