விரைவில் வரவுள்ள ஹைட்ரஜன் ரயில் – சிறப்பம்சங்கள்
பொதுவான எரிபொருட்களின் பதிலாக ஹைட்ரஜன் மூலம் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே துறை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சங்கள் என்ன என்பதனை பார்க்கலாம்.
காற்று மாசைக் குறைக்கவும், சுற்றுச்சூழலுக்கு பயனாகவும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. இதன் ஒரு பகுதியாக, கிரீன் ஹைட்ரஜன் ரயில்கள் சோதனை முறையில் இயக்கப்படுகின்றன.
சென்னையில் உள்ள ICF தொழிற்சாலையில், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் நடைபெற்ற முதற்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தது.
இதன்பிறகு, ஹரியானாவின் ஜிந்த்-பானிபட் பாதையில் இந்த ரயிலை முழுமையாக இயக்கி சோதனை செய்யும் பணிகள் நடக்கின்றன. அதிகாரிகள் தெரிவித்ததாவது, இந்த ரயில்கள் 360 கிலோ ஹைட்ரஜனைப் பயன்படுத்தி சுமார் 90 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்க முடியும்.
இந்த ரயில்கள் காற்று மாசு மற்றும் ஒலி மாசை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், 20–25 நிமிடங்களில் எரிபொருளை நிரப்பி இயக்கலாம். இரண்டு புறங்களிலும் எரிபொருள் தொட்டிகள் இருக்கும்; பயணிகள் வசதிக்காக 8 வழக்கமான பெட்டிகள் மற்றும் 2,600 பேர் பயணிக்கக் கூடிய வசதி உள்ளது.
கிரீன் ஹைட்ரஜன் திட்டம் தொடர்பாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்ததாவது, சுமார் 80 கோடி செலவில் 35 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2070 வரை கார்பன் வெளியேற்றம் இல்லாத பயணம் இலக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் நீரிலிருந்து பிரித்து எரிபொருளாக பயன்படுத்தப்படுவதால் உற்பத்தி செலவு குறையும். இதற்காக ஹைட்ரஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
வந்தே பாரத், அம்ரித் பாரத், நமோ பார்த் போன்ற முன்னணி திட்டங்களை தொடர்ந்து, ஹைட்ரஜன் ரயில்கள் இந்திய ரயில்வே வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.