“யாருடைய தாயையும் அவதூறாக பேசக் கூடாது; ஆனால் பிரதமர் மோடி…” – தேஜஸ்வி யாதவ்
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தைப் பற்றி கருத்து தெரிவித்த ராஷ்ட்ரிய ஜனதா தள (RJD) தலைவர் மற்றும் பிஹார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், “எந்த மனிதரின் தாயாரைப் பற்றியும் தவறாக பேசக் கூடாது; இதை நாங்கள் ஏற்கவில்லை. இது எங்கள் கலாச்சாரத்துக்கு ஒவ்வாதது. ஆனால் பிரதமர் மோடி தாமும் சோனியா காந்தி குறித்து அவதூறாகப் பேசியுள்ளார். நிதிஷ் குமாரின் டிஎன்ஏ குறித்தும் அவமதிப்பாக பேசியுள்ளார்,” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
“பல பாஜக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் கூட என்னுடைய தாயார் மற்றும் சகோதரிகளைப்பற்றி அவதூறாகப் பேசியுள்ளனர். பாஜக செய்தித் தொடர்பாளர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே பெண்களை அவமதிக்கிறார்கள். பிஹார் மக்கள் அனைத்தையும் நன்கு அறிந்திருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்தபோது பிரதமர் மோடி சிரித்துக்கொண்டிருந்தார்; ஆனால், நாடு திரும்பியபின் அழுதுகொண்டு பேசுகிறார்.”
இதற்கிடையில், மோடியின் தாயாரை அவதூறாகப் பேசிய சம்பவத்தை கண்டித்து பிஹாரில் நாளை (செப்டம்பர் 4) முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அன்னப்பூர்ணா தேவி, “இண்டியா கூட்டணியினர் விரக்தியால் இத்தகைய அவதூறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்” என்று விமர்சித்தார்.
குறிப்பாக, சமீபத்தில் பிஹாரின் தர்பங்காவில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ பேரணியின் போது, அடையாளம் தெரியாத ஒருவர் பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் குறித்து அவதூறாகக் குறிப்பிட்டார். அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதற்கு முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பாஜகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில், பிஹாரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:
“பாரம்பரியம் மிகுந்த பிஹாரில் இப்படிப் பட்ட நிகழ்வு நடந்திருப்பது எனக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் – ஆர்ஜேடி நிகழ்ச்சியில் என் தாய் குறித்து தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அது என் தாயருக்கே அல்ல; நாட்டின் அனைத்து தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், மகள்களுக்கும் அவமானமாகும். இதைக் கேட்ட ஒவ்வொரு தாயும் மன வேதனையில் ஆழ்ந்திருப்பார்கள். நான் உணரும் வலியை, பிஹார் மக்களும் உணர்கிறார்கள்.
கோடிக்கணக்கான மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்பதற்காக என் தாய் என்னைத் தன்னிடமிருந்து பிரித்தார். அவர் இப்போது இல்லை என்பது உங்களுக்கு தெரியும். அரசியலுடன் தொடர்பில்லாத என் தாயைப் பற்றிக் காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டத்தில் அவதூறாகப் பேசினர்.
என் சகோதரிகளும், தாய்மார்களும், மகள்களும் உணரும் துயரத்தை நானும் உணர்கிறேன். இது மிகவும் வேதனையானது. ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்த இளவரசனால் ஏழைத் தாயின் வலியை புரிந்து கொள்ள இயலாது” என்று மோடி உரையாற்றினார்.