டெல்லியில் கனமழை – யமுனை அபாய அளவைத் தாண்டி வெள்ளப்பெருக்கு

டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் தாக்கத்தால், யமுனை நதி அபாய அளவை மீறி கரைபுரளத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக 7,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இன்றைய (புதன்கிழமை) மதியம் 1 மணி நிலவரப்படி, யமுனை நீர்மட்டம் அபாய அளவான 205.33 மீட்டரைத் தாண்டி 207 மீட்டராக உயர்ந்தது. இதனால் கரையோர மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பல சாலைகள், வீடுகள், கடைகள், சந்தைகள் ஆகியவை வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 25 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மக்கள் பாதுகாப்புக்கான பணிகளை வேகப்படுத்தியுள்ளது. தற்போது நான்கு குழுக்கள் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் 14–18 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் NDRF கமாண்டன்ட் ஞானேஸ்வர் சிங் தெரிவித்தார்.

யமுனா பஜார் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெளியேற்றப்பட்டனர். அங்கு தங்கியிருந்தவர்கள் பிஸ்கட், பிரெட் போன்றவற்றை உண்டு பசியாறினர். அதேபோல் நொய்டா செக்டர் 167 உள்ளிட்ட பல இடங்களில் மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று வானம் மேகமூட்டத்துடன் இருந்து மிதமான மழை பெய்யும்; நாளை இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 5 ஆம் தேதி மிதமான மழையும், செப்டம்பர் 6 அன்று இடியுடன் கூடிய மழையும் பெய்யும். செப்டம்பர் 7, 8 தேதிகளில் வானம் மேகமூட்டமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Facebook Comments Box