“நக்சலைட்டுகள் சரணடையும்; பிடிபடும்; ஒழிக்கப்படும் வரை மோடி அரசு ஓயாது” – அமித் ஷா

நாட்டில் உள்ள அனைத்து நக்சலைட்டுகளும் சரணடையும் வரையோ, கைது செய்யப்படும் வரையோ அல்லது அழிக்கப்படும் வரையோ, மோடி அரசு எந்த நிலையிலும் பின்வாங்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் கரேகுட்டா மலைப்பகுதியில், ‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ எனப்படும் மிகப்பெரிய நடவடிக்கையை மத்திய ரிசர்வ் காவல் படையினர், சத்தீஷ்கர் காவல் துறையினர், மாவட்ட வனப் பாதுகாப்புப் படையினர் மற்றும் கோப்ரா படையினர் இணைந்து வெற்றிகரமாக மேற்கொண்டனர். இந்த வீரர்களை சந்தித்து பாராட்டியபோது அமித் ஷா உரையாற்றினார்.

அவர் கூறியதாவது:

“கரேகுட்டா மலைப்பகுதியில் நடைபெற்ற ‘பிளாக் ஃபாரஸ்ட்’ நடவடிக்கையில் வீரத்துடன் பங்கேற்ற அனைத்து பாதுகாப்புப் படையினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நக்சலைட்டுகள் சரணடையும் வரையோ, பிடிபடும் வரையோ அல்லது முற்றிலும் அழிக்கப்படும் வரையோ மோடி அரசு சோர்வடையாது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே எங்களின் நோக்கம்.

கடினமான சூழல், வெடிமருந்துகளின் அபாயம், மலைப்பகுதி போன்ற சவால்களுக்கு மத்தியிலும், பாதுகாப்புப் படையினர் மிகுந்த தைரியத்துடன் நக்சலைட் பகுதிகளில் நுழைந்து நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்துள்ளனர். கரேகுட்டாவில் நக்சலைட்டுகள் வைத்திருந்த ஆயுத களஞ்சியங்களையும், விநியோக வலையையும் முற்றிலும் சிதைத்துள்ளனர்.

நக்சலைட்டுகள் நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் பள்ளிகள், மருத்துவமனைகளை மூடி, மக்களுக்கு அரசுத் திட்டங்கள் சென்றடையாமல் தடுத்துள்ளனர். ஆனால் இப்போது பசுபதிநாத் முதல் திருப்பதி வரை உள்ள பகுதிகளில் 6.5 கோடி மக்களின் வாழ்க்கையில் புதிய ஒளி பரவியுள்ளது.

மேலும், நக்சலைட்டுகளை எதிர்த்து போராடிய பாதுகாப்புப் படையினருள் பலர் கடுமையான காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மோடி அரசு மேற்கொண்டு வருகிறது” என அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் சத்தீஷ்கர் முதல்வர் விஷ்ணுதேவ் சாய், துணை முதல்வர் விஜய் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Facebook Comments Box