டிசம்பர் 2024-க்குள் இந்தியா வந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச சிறுபான்மையினருக்கு விசா, பாஸ்போர்ட் இல்லாவிட்டாலும் தங்க அனுமதி
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச நாடுகளில் மத அடிப்படையிலான துன்புறுத்தலால் அங்குள்ள இந்து, கிறிஸ்தவ, சீக்கிய, புத்தமத, ஜெயின், பார்சி ஆகிய 6 சிறுபான்மை சமூகத்தினர் இந்தியாவில் தஞ்சம் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 2024 டிசம்பர் 31-ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் மற்றும் விசாவுடன் இந்தியாவுக்கு வந்திருந்த இந்த 6 மதச் சிறுபான்மையினரும், தற்போது அந்த ஆவணங்கள் காலாவதியாகி இருந்தாலும், இந்தியாவில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடம் பாஸ்போர்ட், விசா இல்லாத காரணத்தால் எந்த விதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது.
இதற்காக, குடியேற்ற மற்றும் வெளிநாட்டினர் சட்டம் – 2025 கடந்த திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்தது. அதனுடன், குடியேற்ற மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) உத்தரவு 2025 படி, நேபாளம், பூடான், திபெத் ஆகிய இடங்களில் இருந்து 1959 முதல் 2003 மே 30 வரை காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சிறப்பு உள்நுழைவு அனுமதி பெற்று வந்தவர்களும் இந்தியாவில் தங்க அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் சீனா, மக்காவ், ஹாங்காங், பாகிஸ்தான் வழியாக நேபாளம் மற்றும் பூடான் மக்களால் இந்தியாவுக்கு நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது.
புதிய குடியேற்றச் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ், பாஸ்போர்ட் அல்லது விசா இல்லாமல் இந்தியாவுக்கு நுழைந்தால் 5 ஆண்டு சிறை தண்டனையும், அதிகபட்சம் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம். மேலும், பாஸ்போர்ட், விசா காலாவதியான பிறகும் இந்தியாவில் தங்கினால், 23-வது பிரிவின் படி 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல், கல்லூரிகள், மருத்துவமனைகளில் சேரும் வெளிநாட்டினர்கள் தங்களது விவரங்களை மறைத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2024 மார்ச் 11-ம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி, 2014 டிசம்பர் 31-க்குள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை பெற வழிவகை செய்யப்பட்டது. இப்போது அந்தக் காலக்கெடு 2024 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.