இந்தூர் மருத்துவமனையில் எலிகள் கடித்ததில் 2 குழந்தைகள் உயிரிழப்பு – ராகுல் காந்தி கண்டனம்
மத்தியப் பிரதேசம், இந்தூரில் உள்ள பிரபலமான மகாராஜா யஷ்வந்த் ராவ் மருத்துவமனையில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகள், எலிகள் கடித்ததால் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டதாவது:
“இது விபத்தல்ல; வெளிப்படையான கொலை. மிகவும் பயமுறுத்தும், மனிதாபிமானமற்ற சம்பவம் இது. இதைக் கேட்கும் போது உடல் நடுங்குகிறது. ஒரு தாய் தனது குழந்தையை நிரந்தரமாக இழந்துவிட்டார். இதற்குக் காரணம் அரசின் அலட்சியம். தன் பொறுப்பை நிறைவேற்றாததால் தான் இத்தகைய கொடூரம் நடந்துள்ளது,” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிகழ்ந்தது என்ன?
இந்தூரின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான மகாராஜா யஷ்வந்த் ராவ் மருத்துவமனை மாநிலத்திலேயே முக்கிய மையமாகக் கருதப்படுகிறது. அதில் உள்ள பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) பல குழந்தைகள் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்தன.
அந்நிலையில், இரண்டு குழந்தைகளை எலிகள் கடித்தது தெரியவந்தது. உடனே அவர்கள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், காயங்களின் காரணமாக அந்த இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர்.
மாநிலத்தின் மிகப்பெரிய மருத்துவமனையிலேயே இப்படிப் பட்ட சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.