மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலை திறப்புக்கு குக்கி-ஸோ கவுன்சில் ஒப்புதல்: மத்திய அரசு தகவல்
மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலை திறக்க குக்கி-ஸோ பழங்குடியினர் கவுன்சில் சம்மதம் தெரிவித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக குக்கி-ஸோ கவுன்சில் பிரதிநிதிகள், மணிப்பூர் அரசு மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் இடையே நடந்த கலந்துரையாடலில் இதற்கான முடிவு எட்டப்பட்டது.
பொதுப் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மாநிலத்திற்கு செல்ல தேசிய நெடுஞ்சாலை எண் 2 திறக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குக்கி-ஸோ கவுன்சில் மற்றும் பாதுகாப்புப் படையினரும் முழுமையாக ஒத்துழைப்பு தர முன்வந்துள்ளனர் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2023 மே மாதத்தில் மணிப்பூரில் குக்கி-ஸோ மற்றும் மைத்தேயி இனக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், மேலும் 60,000 மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர். பலர் இன்றும் முகாம்களில் தங்கியிருக்கின்றனர்.
இந்த நிலையில், மணிப்பூர் – நாகாலாந்து இணைப்புக்கான முக்கிய நெடுஞ்சாலை என்எச்-2, கடந்த 2023 முதல் பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டிருந்தது. நெடுஞ்சாலை திறப்பதால் அத்தியாவசியப் பொருட்கள் அரசியல் சிக்கலின்றி வரவிருக்கும். இதனால், கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் நிவாரண முகாம்களில் இருக்கும் மக்கள் துயரங்கள் குறைய வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறைக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக 13-ஆம் தேதிக்கு அந்த மாநிலத்திற்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. புதிதாக அமைக்கப்பட்ட பைரபி – சாய்ராங் ரயில் பாதையை திறக்கும் முன் பிரதமர் முதலில் மிசோரத்திற்கு செல்ல உள்ளார். இந்தச் சூழலில், மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலை எண் 2 திறப்பைச் சம்பந்தப்பட்ட தகவல் குறிப்பிடத்தக்கது.