இமாச்சல், உத்தராகண்ட் நிலச்சரிவு – காடுகள் அழிப்பு காரணமா? உச்சநீதிமன்றம் கேள்வி
இந்தாண்டு ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலச்சரிவும், வெள்ளமும் ஏற்பட்டது. வெள்ளத்தில் பெருமளவில் மரக்கட்டைகள் அடித்துச் செல்லப்பட்டன.
இதையடுத்து, அனாமிகா ரானா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அதில், “நிலச்சரிவால் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. நதிகளில் வெள்ளம் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதற்கான காரணங்களை ஆய்வு செய்ய புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம், மீட்பு, பாதுகாப்பு மற்றும் முதலுதவி ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்” எனக் கூறப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி, “வெள்ளத்தில் அதிக மரங்கள் அடித்துச் செல்லப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது, பெருமளவில் சட்டவிரோத மரவெட்டுதலால் ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. அதுவே நிலச்சரிவுக்கும் காரணமாக இருக்கக்கூடும். வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் சமநிலை அவசியம். எனவே, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மேலும் இமாச்சல், உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மாநில அரசுகள் பதில் தாக்கல் செய்ய வேண்டும்” எனக் கூறினார்.
இதற்கு பதிலளித்த சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா, “இந்த விவகாரம் தொடர்பாக சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளர் மற்றும் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறேன்” என்றார்.