எந்த எதிர்ப்பும் இன்றி ஜிஎஸ்டி குறைப்புக்கு ஒப்புதல் – நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி வரி குறைப்பை அனைத்து மாநிலங்களும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் கூட ஒருமித்தமாக ஏற்றுக்கொண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி விகித மாற்றம் குறித்து அவர் கூறியதாவது:

“ஜிஎஸ்டி அமல்படுத்தி 8 ஆண்டுகள் ஆன நிலையில் மிகப்பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி அறிவித்தபடி இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் இதில் இணைந்து ஒப்புதல் அளித்துள்ளன. எந்த மாநிலமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நடுத்தர வர்க்க மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்பதே பிரதமரின் நோக்கம்.

அதேசமயம் கூட்டாட்சி முறையை வலுப்படுத்தும் வகையில், மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ஏனெனில் ஜிஎஸ்டி வசூல் என்பது மத்திய, மாநில அரசுகள் இரண்டையும் சார்ந்தது. மாநிலங்கள் பாதிக்கப்பட்டால், மத்திய அரசும் பாதிக்கப்படும். எனினும், பொதுமக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் பிரதான குறிக்கோள்” என்றார்.

தொழில்துறையினர் பொறுப்பு – பியூஷ் கோயல்

ஜிஎஸ்டி குறைப்பின் பலன்கள் நுகர்வோருக்கே சேர வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.

அவர் கூறியதாவது:

“முதலாவது, ஜிஎஸ்டி குறைப்பால் தொழில்துறைக்கு கிடைக்கும் சேமிப்பு முழுவதும் நுகர்வோருக்கு செல்ல வேண்டும் என்று உறுதி தர வேண்டும்.

இரண்டாவது, இந்திய தயாரிப்புகளை மக்களிடம் தீவிரமாக கொண்டு சேர்த்து அவற்றின் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும். இந்த இரண்டு உறுதிமொழிகளையும் தொழில்துறையினர் பிரதமர் மோடிக்கு அளிக்க வேண்டும்” என்றார்.

மீன்வளத்துறைக்கு நன்மை

மீன்வளத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

“மீன் உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சுமார் 95 லட்சம் டன் மீன் பிடிக்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் கடல் உணவு ஏற்றுமதி ரூ.60,000 கோடியை கடந்தது. தற்போது 3 கோடிக்கும் மேற்பட்டோர் மீன்வளத்துறையில் வாழ்வாதாரத்தைப் பெற்றுள்ளனர்.

மீன் எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட மீன் வகைகளுக்கான ஜிஎஸ்டி 12% இலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டீசல் எஞ்சின், பம்புகள், வலைகள், மீன் பிடி மற்றும் வளர்ப்பு உபகரணங்களுக்கான ஜிஎஸ்டியும் 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் செலவை குறைத்து அதிக போட்டியுடன் செயல்பட முடியும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments Box