மைதேயி – குகி அமைப்புகள், மத்திய அரசு இடையே உடன்பாடு: மணிப்பூரில் அமைதி நிலை பெறும் நம்பிக்கை
மணிப்பூரில் நீண்டகாலமாக நீடித்து வந்த மோதலுக்கு முடிவு கட்டும் வகையில், மைதேயி, குகி சமூக பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு இடையே சமரச ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி குகி சோ கவுன்சில், தேசிய நெடுஞ்சாலை-2ஐ மீண்டும் திறக்க ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வர்த்தகப் போக்குவரத்து சீராக நடைபெற வழி திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 மே மாதம் மைதேயி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வெடித்த கலவரத்தில் 258 பேர் உயிரிழந்தனர். 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 400 தேவாலயங்களும், 132 இந்து கோயில்களும் சேதமடைந்தன. 60,000-க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் வன்முறை சூழல் நீடித்து வந்தது.
இந்நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகள், குகி சோ கவுன்சில் மற்றும் மைதேயி சமூகத்தின் ஐக்கிய மக்கள் முன்னணியுடன் பலமுறை கலந்துரையாடினர். அதன் விளைவாக மூவுறுப்பு உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.
மத்திய அரசின் அறிக்கை
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி,
- குகி சோ கவுன்சில் தேசிய நெடுஞ்சாலை-2ஐ திறக்க சம்மதித்துள்ளது.
- அப்பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் படையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.
- கிளர்ச்சிக் குழுக்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை அருகிலுள்ள சிஆர்பிஎப், பிஎஸ்எப் முகாம்களில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் வெளிநாட்டினர் ஈடுபடுவதாகக் கூறப்படும் புகார்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- கிளர்ச்சிக் குழுக்களின் முகாம்கள் மூடப்பட உள்ளன.
இதன் மூலம் மணிப்பூரில் அமைதி நிலை பெறும் சூழல் உருவாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மணிப்பூர் போலீஸ் தகவல்
மாநில போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
பள்ளத்தாக்குப் பகுதிகளில் பெரும்பான்மையாக மைதேயிகள் வசிக்கின்றனர். மலைப் பகுதிகளில் குகி மக்கள் அதிகம் உள்ளனர். 2023 கலவரத்திற்குப் பிறகு இரு தரப்பினரும் எதிரணிகளாக இருந்தனர். இப்போது மத்திய அரசின் இடையூறற்ற முயற்சியால், முதல்கட்டமாக மைதேயி – குகி – மத்திய அரசு இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நிலைத்தன்மை திரும்பும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
நாகா அமைப்பின் எதிர்ப்பு
அதே நேரத்தில், இந்தியா-மியான்மர் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு வேலி அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கை மற்றும் எப்எம்ஆர் (Free Movement Regime) ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முயற்சிக்கு நாகா சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதனால் தங்களின் இன, குடும்ப உறவுகள் பாதிக்கப்படும் என்று நாகா அமைப்புகள் அச்சம் தெரிவிக்கின்றன. இதற்காக, செப்டம்பர் 8 முதல் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் வர்த்தகத் தடையை அமல்படுத்தவுள்ளதாக ஐக்கிய நாகா கவுன்சில் அறிவித்துள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலைகளில் சரக்கு வாகனங்களின் இயக்கத்தையும் தடை செய்வது அடங்கும்.