ஜிஎஸ்டி 2.0: மாநிலங்களுக்கு 5 ஆண்டுகள் இழப்பீடு வழங்க வேண்டும் – கார்கே வலியுறுத்தல்
காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:
“ஜிஎஸ்டியை எளிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கடந்த 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால் மோடி அரசு ‘ஒரு நாடு – ஒரு வரி’ எனும் கருத்தை ‘ஒரு நாடு – ஒன்பது வரிகள்’ என மாற்றி வைத்துவிட்டது. தற்போது நடைமுறையில் உள்ள வரி விகிதங்களில் 0%, 5%, 12%, 18%, 28% மற்றும் 0.25%, 1.5%, 3%, 6% என்ற சிறப்பு வரிகளும் அடங்குகின்றன.
2019 மற்றும் 2024 தேர்தல் அறிக்கைகளில் எளிமையான ஜிஎஸ்டி 2.0 பற்றி காங்கிரஸ் முன்வைத்திருந்தது. மொத்த ஜிஎஸ்டி வசூலில் மூன்றில் இரண்டு பங்கு (சுமார் 64%) ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களிடமிருந்து வருகிறது. ஆனால் கோடீஸ்வரர்களிடம் இருந்து வெறும் 3% மட்டுமே பெறப்படுகிறது.
மேலும், கார்ப்பரேட் வரி விகிதம் 30% இலிருந்து 22% ஆகக் குறைக்கப்பட்டு, பணக்காரர்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டது. எட்டு ஆண்டுகளாக மந்தமாக இருந்த மோடி அரசு, இப்போது தான் விழித்துக்கொண்டு ஜிஎஸ்டியில் மாற்றம் கொண்டு வந்துள்ளது என்பது நல்ல விஷயமே.
ஆனால், ஜிஎஸ்டி குறைப்பால் மாநிலங்களின் வருவாயில் இழப்பு ஏற்படும் சூழலில், அந்த இழப்பை மத்திய அரசு குறைந்தது 5 ஆண்டுகள் ஈடு செய்ய வேண்டும்,” என்றார் கார்கே.