ரஷ்ய எண்ணெய் இறக்குமதியால் பிராமணர்களுக்கு மட்டுமே லாபம் என நவரோ கூறியது தவறு – இந்தியா
ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதால் பிராமணர்களே பயனடைகிறார்கள் என்ற அமெரிக்க வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோவின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்றும், அதை இந்தியா மறுக்கிறது என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதைத் தெளிவுபடுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது:
“மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம் குலாம் இந்த மாதம் 9ஆம் தேதி இந்தியா வருகிறார். 16ஆம் தேதி வரை அவர் இந்தியாவில் தங்குவார். தற்போதைய பதவிக்காலத்தில் அவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை. தனது பயணத்தின் போது டெல்லி, மும்பை, வாரணாசி, அயோத்தி, திருப்பதி போன்ற நகரங்களுக்கும் செல்கிறார். இதற்கு முன்பு, 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் வந்திருந்தார்.” என்றார்.
பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
டொனால்டு ட்ரம்ப் கூறிய “இந்தியாவையும், ரஷ்யாவையும் சீனாவிடம் இழந்துவிட்டோம்” என்ற கருத்து குறித்து கேட்கப்பட்டபோது, அவர் அதில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்து அவர் கூறியதாவது:
“ஆகஸ்ட் 31ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் இத்தகைய போராட்டங்கள் நடந்தன. அங்கு உள்ள தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் அனைத்தும் எங்களுடன் தொடர்பில் உள்ளன. இந்த விவகாரம் ஆஸ்திரேலிய அரசின் கவனத்திற்கும் எதிர்க்கட்சிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. அவர்கள், ஆஸ்திரேலியாவின் பன்முகத்தன்மையை ஆதரிக்கிறோம் என்றும், அங்குள்ள சுமார் 10 லட்சம் இந்தியர்கள் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு அளித்து வரும் பங்களிப்பை மதிக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.”
பின்னர் பீட்டர் நவரோ கூறிய “ரஷ்யா–இந்தியா எண்ணெய் வர்த்தகம் பிராமணர்களுக்கு மட்டுமே நன்மை அளிக்கிறது” என்ற குற்றச்சாட்டு குறித்து,
“அவர் சில தவறான கருத்துகளை வெளியிட்டிருப்பதை பார்த்தோம். அவற்றை நாங்கள் தெளிவாக நிராகரிக்கிறோம்,” என்று ஜெய்ஸ்வால் வலியுறுத்தினார்.
முன்னதாக, ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் நவரோ கூறியதாவது:
“புடின் குறைந்த விலையில் கச்சா எண்ணெயை மோடிக்கு கொடுக்கிறார். அதை இந்தியா சுத்திகரித்து ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெரும் லாபம் ஈட்டுகிறது. இந்திய மக்களின் செலவிலிருந்து பிராமணர்கள் லாபம் பெறுகிறார்கள். மேலும், இந்தியா தான் ரஷ்யாவின் உக்ரைன் போருக்கு நிதி ஆதரவாக உள்ளது. இதற்காக அமெரிக்கா விதித்த 50% வரி சரியான நடவடிக்கையே,” என்று தெரிவித்தார்