“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடரும்” – நிர்மலா சீதாராமன்

இந்தியா, ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தொடரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது நாட்டின் நலனை கருத்தில் கொண்ட முடிவு என்றும் அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடந்த ஜூலை மாத இறுதியில், இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது எனத் தெரிவித்து, அதனை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். இதனையடுத்து, இந்தியாவுக்கு எதிராக 25 சதவீத பரஸ்பர வரியும், கூடுதலாக 25 சதவீத வரியும் விதித்து மொத்தம் 50 சதவீதம் வரி அமல்படுத்தப்பட்டது. தற்போது அந்த வரிகள் நடைமுறையில் உள்ளன.

இந்த நிலைமை உலகளவில் பெரும் விவாதமாக உள்ளது. இதுகுறித்து தனியார் ஊடக நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

“இந்தியாவின் தேவையை கருத்தில் கொண்டு, பல்வேறு நாடுகளில் இருந்து பலவிதமான பொருட்களை இறக்குமதி செய்கிறோம். அதேபோல, விலை உள்ளிட்ட அம்சங்களையும் கவனத்தில் எடுத்து தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

கச்சா எண்ணெய் என்பது நமது அந்நியச் செலவாணி செலவில் மிகப் பெரிய பங்கு வகிக்கும் பொருள். எனவே நமக்கு பொருத்தமாக இருக்கும் இடத்திலிருந்து அதை வாங்குகிறோம். அந்த அடிப்படையில், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்ந்து நடைபெறும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box