பிஹாரில் குற்றமும் ஊழலும் அதிகரித்துள்ளன: தேஜஸ்வி யாதவ் விமர்சனம்
பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சியில் குற்றச்செயல்கள் மற்றும் ஊழல் அதிகரித்து வருவதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக குற்றம் சாட்டினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் பிஹார் மோசமான நிலைமையில் தள்ளப்பட்டிருக்கிறது. குற்றமும் ஊழலும் அன்றாடம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம் ஆகிய துறைகளின் நிலைமை மிகவும் சீர்குலைந்துள்ளது. தனிநபர் வருமானம் மற்றும் முதலீட்டில் பிஹார் மிகக் குறைவான நிலையில் உள்ளது. விவசாயிகளின் வருமானத்தில் பிஹார் கடைசி இடத்தில் உள்ளது. மாநிலத்தில் தொழில் வளர்ச்சி இல்லை, வணிக வாய்ப்புகளும் இல்லை,” என்றார்.
சில மாதங்களில் பிஹாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், தேஜஸ்வி யாதவ் அங்குள்ள NDA அரசை தொடர்ந்து கடுமையாக தாக்கி வருகிறார்.
இதற்கு முன்னதாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
“பிஹார் பந்துக்காக பாஜக தங்கள் ஆட்களை வேலைக்கு அமர்த்தியிருக்கலாம். காவல்துறைக்கும் நிர்வாகத்திற்கும் அழுத்தம் கொடுத்து, போக்குவரத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டிருக்கலாம். உலகின் மிகப்பெரிய கட்சி என்று சொல்லிக் கொள்ளும் பாஜக நேற்று நாடு முழுவதிலிருந்தும் குண்டர்களை வெளிப்படுத்தியது.
பெண்களையும் ஆசிரியர்களையும் தாக்கினர். கர்ப்பிணிப் பெண்களை தடுத்தனர். மூத்த குடிமக்களை தள்ளினர். மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டனர். குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் தடுத்தனர். ஆம்புலன்ஸ்கள் செல்லாமல் நிறுத்தினர். தியாகிகளின் குடும்பத்தினரையும் தாக்கினர்,” எனக் குற்றம் சாட்டினார்.