மும்பை வெடிகுண்டு மிரட்டல் – நொய்டாவில் நபர் கைது
மும்பையில் 34 இடங்களில் மனித வெடிகுண்டுகள் வெடிக்கும் என வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் விடுத்த நபர், உத்தரப் பிரதேச நொய்டாவில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த அந்த செய்தியில், “லஷ்கர்-இ-ஜிஹாதி அமைப்பைச் சேர்ந்த 14 பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்கு நுழைந்துள்ளனர். மும்பையில் 34 இடங்களில் மனித வெடிகுண்டுகள் வெடிக்க உள்ளன. 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட இருக்கிறது” என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மும்பை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. நகரின் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மிரட்டல் செய்தி அனுப்பிய நபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். விசாரணையில், பீகாரின் பாடலிபுத்ராவைச் சேர்ந்த 51 வயதான அஸ்வினி குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த 5 ஆண்டுகளாக நொய்டாவில் வசித்து வந்ததாகவும், தனது நண்பர் ஃபிரோஸிடம் பழி வாங்கும் நோக்கில் இந்த போலி செய்தியை அனுப்பியதாகவும் தெரியவந்தது.
அஸ்வினி குமாரிடமிருந்து 7 மொபைல் போன்கள், 3 சிம் கார்டுகள், 6 மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை மும்பைக்கு அழைத்து சென்று விசாரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.