பாஜக பின்னணியில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது – கார்கே விமர்சனம்
வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து, தேர்தல் ஆணையம் பாஜகவின் ஆதரவோடு செயல்படுகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் விமர்சனம் செய்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த மாதம் 2024 மக்களவைத் தேர்தலிலும் பல மாநிலத் தேர்தல்களிலும் வாக்கு திருட்டு மோசடி நடந்ததாக குற்றம் சாட்டினார். இதற்கான ஆதாரம் மற்றும் உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டது. அதனை தொடர்ந்து பிஹாரில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி மீண்டும் வாக்கு திருட்டு விவகாரத்தை முன்வைத்தார்.
இந்த நிலையில், கார்கே தனது எக்ஸ் பதிவில்,
“பாஜகவின் வாக்கு திருட்டு செயல்களில் தேர்தல் ஆணையமே பின்னணியாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. 2023 கர்நாடக தேர்தலில், ஆலந்த் தொகுதியில் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை காங்கிரஸ் கண்டுபிடித்தது. நுட்பமாக நடந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் சுமார் 5,994 விண்ணப்பங்கள் போலியானவை என தெரியவந்தது. குற்றவாளிகளை கண்டறிய சிஐடி விசாரணை காங்கிரஸ் அரசால் தொடங்கப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் சில ஆவணங்கள் இருந்தாலே போதும் என சொல்லி, வாக்கு மோசடியில் ஈடுபட்டவர்களை மறைமுகமாக காக்கும் நிலைப்பாடு எடுத்தது.
இந்த திடீர் நடவடிக்கையின் பின்னணி என்ன? யாரை காப்பாற்றுகிறது? இந்திய ஜனநாயகத்தையும், தனிநபரின் வாக்குரிமையையும் பாதுகாப்பதே ஆணையத்தின் கடமை,” என கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.