பாஜக எம்பிக்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் – கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் மோடி

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இரு நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கடைசி வரிசையில் அமர்ந்து அனைத்து நிகழ்வுகளையும் கவனித்தார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்த பயிற்சி முகாமில், செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது. பாஜக எம்பிக்கள் அனைவரும் பங்கேற்ற இந்த கூட்டத்தில், ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

முதல் நாள் கூட்டத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அவை – 2027-க்குள் முன்னேறிய இந்தியாவை உருவாக்கும் நோக்கில் செயல்திட்டங்கள் அமைத்தல் மற்றும் சமூக வலைதளங்களை திறமையாக பயன்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தல்.

மதியத்திற்கு பின் நடைபெற்ற அமர்வில் வேளாண்மை, பாதுகாப்பு, எரிசக்தி, கல்வி, ரயில்வே, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகள் குறித்து எம்பிக்கள் குழுக்களாகப் பிரிந்து விவாதித்தனர்.

இன்று நடைபெறும் இரண்டாம் நாள் பயிற்சியில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் எம்பிக்களுக்கு அளிக்கப்பட உள்ளது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

செப்டம்பர் 9 அன்று நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், இந்தியா கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி (80) போட்டியிடுகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) சார்பில் சி. பி. ராதாகிருஷ்ணன் (67) வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இருவரும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதே சிறப்பு. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்; தற்போது மகாராஷ்டிரா மாநில ஆளுநராக உள்ளார். அவர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கோவையில் இருந்து இருமுறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்.

சுதர்சன் ரெட்டி ஆந்திராவைச் சேர்ந்தவர்; 2011 ஜூலையில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றார். நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் கருப்பு பணம் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பல வரலாற்று தீர்ப்புகளை வழங்கியவர்.

Facebook Comments Box