பிஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதாரை செல்லத்தக்க ஆவணமாக ஏற்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
பிஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம்
உச்ச நீதிமன்ற உத்தரவு: ஆதார் அட்டை செல்லத்தக்க ஆவணம்
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆதாரை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு
- அடையாளச் சான்றாக மட்டுமே பயன்படும், குடியுரிமை சான்றாக அல்ல
பிஹாரில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்காக, ஆதார் அட்டையை செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அமர்வில் விசாரணை நடந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “ஆதாரை குடியுரிமை சான்றாக அல்ல, வசிப்பிடச் சான்றாக மட்டும் பயன்படுத்த வேண்டும். அதனால் ஒருவர் வாக்களிக்க தகுதி பெறுவார்” என வலியுறுத்தினார்.
தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, “ஆதார் குடியுரிமை சான்றாக இல்லை. ஆனால் அடையாள ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்கிறது” என்றார்.
இறுதியில் நீதிமன்றம், ஆதாரை 12-வது ஆவணமாக சேர்க்க உத்தரவிட்டது. ஆனால் அது அடையாளச் சான்றாக மட்டுமே பயன்படும் எனவும், பிற ஆவணங்களைப்போல அதிகாரிகள் அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்கலாம் எனவும் தெரிவித்தது. மேலும், இந்த உத்தரவை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டு, பொதுமக்களுக்கு அறிவிக்கவும் உத்தரவிடப்பட்டது.